தமிழ் சினிமாவில் தர்மத்தின் தலைவன் படம் மூலம் நடிகர் பிரபுவுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானவர் நடிகை குஷ்பு. 1990களில் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகியாக குஷ்பு கொடி கட்டி பறந்தார். ரஜினிகாந்த் கமல்ஹாசன் விஜயகாந்த் சத்யராஜ் பிரபு கார்த்திக் சரத்குமார் என அன்றைய முன்னணி நட்சத்திரங்களுடன் குஷ்பு ஜோடியாக நடித்தார்.
இதில் பெரும்பாலான அவரது படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக பெரிய அளவில் வரவேற்பை பெற்றன. இந்நிலையில் முறைமாமன் படத்தில் குஷ்பு நடித்த போது அந்த படத்தின் இயக்குனர் சுந்தர் சி யை காதலித்து குஷ்பு திருமணம் செய்து கொண்டார். இந்த நட்சத்திர தம்பதிக்கு அவந்திகா அனந்திகா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.
நடிகை குஷ்பு கடந்த பல ஆண்டுகளாக அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். திமுக காங்கிரஸ் கட்சிகளை தொடர்ந்து அவர் தற்போது பாரதிய ஜனதா கட்சியில் இருந்து வருகிறார். தமிழக பாஜகவின் மாநிலத் துணைத் தலைவராகவும் குஷ்பு இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் குஷ்பூ மற்றும் சுந்தர் சி தம்பதி தனது மூத்த மகள் அவந்திகா திருமண அழைப்பிதழை பிரதமர் மோடியை நேற்று நேரில் சந்தித்து வழங்கினார்.
இந்த தகவலை நடிகை குஷ்பு தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது, இந்திய பிரதமர் மோடியை சந்திக்கும் பாக்கியம் எங்களுக்கு கிடைத்தது. பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் இருந்தார். அப்போது நானும் என் கணவர் சுந்தர் சியும் எங்கள் மகளின் திருமணத்திற்கான அழைப்பிதழை பிரதமர் மோடியிடம் வழங்கினோம்.
மோடி எங்களை மனமுவந்து வாழ்த்தினார். தனது பரபரப்பான பணிகளுக்கு மத்தியிலும் எங்களுக்காக நேரம் ஒதுக்கிய பிரதமருக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். நாங்கள் அவருக்கு மிகவும் கடமைப்பட்டவர்களாகவும் பணிவுடன் உணர்கிறோம். நன்றி பிரதமர் ஜி என்று நடிகை குஷ்பு அந்த பதிவில் கூறியுள்ளார்.
குஷ்பு சுந்தர் சி தம்பதியின் மகள் அவந்திகா மற்றும் அவரது வருங்கால கணவர் ஷ்ரவன் ஆகியோரும் பிரதமர் மோடியிடம் திருமண அழைப்பிதழ் தந்த போது உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவந்திகா இப்போதுதான் திரைப்படங்களில் நடிக்க துவங்கியிருக்கிறார். அதற்குள் அவருக்கு திருமணம் என்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.





