நடிகர் விஜய், சில தினங்களுக்கு முன் தமிழக வெற்றி கழகம் என்ற தனது கட்சி பெயரை அறிவித்து, அரசியலில் குதிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார். வருகிற நாடாளுமன்ற தேர்தலை தவிர்த்துவிட்டு, 2026ம் ஆண்டில் வரும் தமிழக சட்டசபை தேர்தல்தான் எங்கள் இலக்கு என்றும் தெளிவாக அறிவித்திருக்கிறார். ஊழல், மதவாதம் ஒழிப்பேன் என்றும் அதில் விஜய் கூறியிருந்தார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற இயக்குநர் மற்றும் நடிகர் அமீர் கூறியதாவது, ஊழல், மதவாதம் இரண்டையும் ஒரு தட்டில் வைத்து பார்ப்பதே தவறு. ஊழலை சட்டத்தின் மூலம் அகற்றிவிடலாம். ஆனால் மதவாதம் வளர்ந்தால் சர்வதிகாரம் அதிகரிக்கும். அதனால் ஊழலை விட மதவாதம்தான் அதிக ஆபத்தானது.
கடந்த 2012ம் ஆண்டில் நடிகர் விஜய், ஒரு உயர்ந்த வகை சொகுசு காரை வாங்கியிருந்தார். அந்த காரை வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு இறக்குமதி செய்தார். அப்போது காருக்கு வரி கட்ட சொன்ன போது, வரி அதிகமாக இருப்பதாக கூறி விஜய், வரி கட்ட மறுத்து விட்டார். அதனால் அந்த காரை பயன்படுத்தாமல் பல ஆண்டுகள் வீட்டில் சும்மா நிறுத்தி வைத்திருந்தார்.
ஒரு கட்டத்தில் வீட்டில் சோதனை நடத்திய வணிகவரித்துறை அதிகாரிகள் கேட்ட போது, நான் வரி அதிகமாக இருந்ததால் வரி கட்டவில்லை. அதனால் காரையும் பயன்படுத்தவில்லை என்று அதிகாரிகளிடம் கூறியிருக்கிறார். இந்த விவகாரம், அடுத்து கோர்ட்டுக்கு சென்றது. அப்போது கோர்ட்டில் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
அதே போல், பிகில் படம் வெளியான போது அவர் ரூ. 5 கோடி வருமான வரி கட்டவில்லை என்பதும் தெரிய வந்தது. அதிகாரிகள் விசாரணையில் அது புலி படத்தில் நடிப்பதற்காக வாங்கிய சம்பளம் என்று கூறப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, அவர் 5 ஆண்டுகளாக வருமானவரி தாக்கல் செய்யாத விஷயமும் வெளிச்சத்துக்கு வந்தது. இதற்கெல்லாம் அபராதம் விதிக்கப்பட்டு விஜயும் கட்டி இருக்கிறார்.
விஜய் ஊழல் பற்றி பேசி இருப்பதால், இதையெல்லாம் சொல்ல வேண்டியிருக்கிறது. ஒரு நல்ல தலைவனுக்கு இதெல்லாம் அழகல்ல. அதே போல் மதவாதம் குறித்து பேசிய விஜய், இந்த 2024 தேர்தலிலும் போட்டியிட்டிருக்க வேண்டும். அதை செய்யாதது ஏன் என்றும் கேள்வி கேட்டிருக்கிறார் இயக்குநர் அமீர். இது தற்போது வைரலாகி வருகிறது.





