தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகராக இருப்பவர் அமீர். அவ்வப்போது சமுதாயம் சார்ந்தும் அரசியல் சினிமா குறித்தும் தனது விமர்சனங்களை ஊடகங்களில் முன்வைத்து வருகிறார். பருத்திவீரன் மௌனம் பேசியதே ராம் போன்ற இவரது படங்கள் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவை.
ராஜன் வகையறா படத்தில் இப்போது அமீர் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் அமீர் கூறியதாவது, ஆட்சி மாற்றம் நடந்து ஒரு மாதம் ஆகப் போகிறது. புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள இந்த ஆட்சியாளர்களிடம் நான் கேட்க விரும்புவது கோரிக்கையாக வைப்பது என்னவென்றால் யாருமே அதைப்பற்றி பேசவில்லை. நானே அதை கோரிக்கையாக வைக்கிறேன்.
கரூர் சம்பவத்தின் உண்மை குற்றவாளி யார்? தயவுசெய்து கண்டுபிடித்து சொல்லுங்க. ஏனென்றால் அது ஒரு மிகப்பெரிய அநீதி நடந்திருக்கிறது. அந்த அநீதியை கடந்த ஆட்சியாளர்கள் செஞ்சிருந்தாங்க என்று சொன்னால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.
இதை அப்போதும் நான் சொன்னேன். இப்போதும் நான் சொல்கிறேன். அன்னைக்கும் சொன்னேன். இன்னைக்கும் சொல்றேன். அல்லது நடக்காத ஒன்றை நடந்ததாக நீங்கள் சொன்னீங்களா? இப்போது உங்கள் கையில் அதிகாரம் இருக்கிறது.
உங்களிடம் ஆட்சி இருக்கிறது. புலனாய்வுத் துறை இருக்கிறது. ஒன்றிய அரசிடம் நீங்கள் கேட்டால் அவர்கள் என்ன செய்து கொடுப்பதற்கும் தயாராக இருக்கிறார்கள். மத்திய புலனாய்வுத் துறையும் இருக்கிறது. கரூர் சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகள் யார் என்பதை கண்டுபிடித்து சொல்லுங்கள்.
இது மக்களுக்கு தெரிய வேண்டும். ஏனென்றால் போன ஆட்சிக்கு முன்பு கொடநாட்டில் என்ன நடந்தது என்பதை கடந்த 5 ஆண்டுகளாக கண்டுபிடிக்கவே இல்லை. அப்படியே அவங்க கடந்து போயிட்டாங்க. எப்படிப்பட்ட அரசியல் சூழலில் நாம் இருக்கிறோம் என்ற கேள்வி எழுகிறது என்று இயக்குனர் அமீர் அப்போது பேசியிருக்கிறார்.





