விஜய் டிவியில் கடந்த 2017ம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து ஆண்டுதோறும் நடந்து வருகிறது 2017ம் ஆண்டு முதல் சீசன் முதல் 2023ம் ஆண்டு வரை 7 ஆண்டுகளாக நடிகர் கமலஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தற்போது கடந்த 2 ஆண்டுகளாக நடிகர் விஜய் சேதுபதி இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இன்னும் சில மாதங்களில் விஜய் டிவியில் பிக் பாஸ் 2026க்கான 10வது சீசன் ஆரம்பமாக உள்ளது. இதை முன்னிட்டு விஜய் டிவியில் புதிய பிரமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் விஜய் சேதுபதி பேசும் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் சிலர், தங்களிடம் பேசும் மற்றவர்களிடம் நான் மட்டும் விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் டைட்டில் வின்னரே நான்தான் என்று பேசுகின்றனர்.
அதன்பிறகு நடிகர் விஜய் சேதுபதி பேசும்போது, இந்த சுவாரசியமான போட்டியை கடந்த 9 வருஷமா நீங்க பார்த்துகிட்டு இருக்கீங்க. ஒவ்வொரு சீசனும் ஒவ்வொரு கண்டஸ்டன்ட்ஸ். இப்போது வரைக்கும் 9 சீசன் முடிந்திருக்கிறது. இனி 10வது சீசன் சீக்கிரமா வரப்போகுது.
இதுவரைக்கும் யாரு டிராமா பண்றாங்க? யாரு உண்மையா இருக்காங்க? யார் சீன் போடுறாங்க? யாரு பொய்யா வீட்டுல இருக்காங்க அப்படீன்னு எல்லாமே உங்களுக்கு நல்லா தெரியும். அப்படிப்பட்ட நீங்களும் இதுல இனி கலந்துக்கலாம். இதுவரைக்கும் வெளியில் இருந்து வேடிக்கை பார்த்தீங்க. இனி நீங்களும் வந்து விளையாடுங்க என்று அதில் விஜய் சேதுபதி கூறியிருக்கிறார்.
அதனால் பொதுமக்களும் இந்த நிகழ்ச்சியில் விருப்பம் இருந்தால் கலந்துக் கொள்ளலாம் என்பதற்கான புதிய பிக்பாஸ் காமன் மேன் இதில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் எந்த பிரபலமும் இல்லாத சாதாரண மக்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இதற்காக 2 நிமிட வீடியோ ஆடிஷன் செய்து அனுப்ப வேண்டும்.
அதிலிருந்து தேர்வாகும் தகுதியான நபர்கள் நேரடியாக பிக்பாஸ் ஆடிஷனுக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான சினிமா நடிகர் நடிகைகளும் டிவி சீரியல் நடிகர் நடிகைகளும் யூடியூப் செலிபிரிட்டிகளும்தான் பங்கு பெற்றனர். இப்போது முன் பின் அறிமுகம் இல்லாத மக்கள் மத்தியில் பரிச்சயம் ஆகாத புதிய நபர்களையும் பொதுமக்களில் சிலரையும் பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்களான அனுப்ப விஜய் டிவி தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.





