நடிகராக இருந்த விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை 2 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கினார். விக்கிரவாண்டி மற்றும் மதுரையில் 2 மாநில மாநாடுகளை நடத்தினார். பெரிய அளவில் பிரமாண்ட கூட்டம் திரண்டது. விஜய் சென்ற இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆனால் தேர்தல் பிரசாரம் செய்ய பல இடங்களுக்கு விஜய் செல்லவும் இல்லை.
ஆனால் நடந்துமுடிந்த சட்டசபை தேர்தலில் 108 இடங்களில் தவெக வெற்றி பெற்ற நிலையில் திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்து விஜய் முதல்வராக ஆகி விட்டார். காங்கிரஸ் விசிக முஸ்லிம்லீக் கட்சிகளுக்கு அமைச்சர் பதவிகளும் தரப்பட்டுள்ளது. விஜய் கட்சி துவங்கிய போது இருந்ததை போலவே இப்போதும் அவர் மீதான விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் நடிகர் விஜய் கோட் அணிந்து வருவது, நெற்றியில் அரகஜா திலகம் வைப்பது கையில் கட்டும் சிவப்பு கயிறு கட்டுவது அவர் போடும் வெள்ளை முழுக்கை சட்டை சந்தன நிற பேண்ட் என்று அவரது கெட்டப் குறித்த வர்ணனைகளும் விமர்சனங்களும் சமூக வலைதளங்களில் அதிகரித்து வருகின்றன.
அத்துடன் காலை 9 மணிக்கு வந்தால் மாலை 4 மணி வரை தலைமை செயலகத்தில் முதல்வர் அறையில் இருப்பது, அங்கேயே மதிய உணவை அவர் வீட்டில் இருந்து எடுத்து வந்து உட்கொள்வது என விஜய் குறித்த இதுபோன்ற விஷயங்களை இணையத்தில் வைரலாக்கி விட ஒரு கூட்டமே உள்ளது.
ஒரு சினிமா ஹீரோவாக இருக்கும் வரை அவரது நடை உடை பாவனைகளை ரசிப்பது மெச்சுவது ரசிகராக அதை ஏற்றுக்கொள்ளலாம்.
ஆனால் இப்போது அவர் ஒரு நாட்டின் தலைவர். தமிழ்நாட்டின் மிக உயர்ந்த பொறுப்பில் முதலமைச்சர் பதவியில் இருப்பவர். இந்த நாட்டின் முன்னேற்றமும் எதிர்காலமும் அவரது வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இதை எல்லாம் சுத்தமாக மறந்து விட்டு இன்னும் அவரை சினிமா ஹீரோவாக பாவித்துக்கொண்டு அவர் செருப்பு போடாமல் நடந்தார். இன்று கோட் அணியாமல் வந்தார் கையில் சிவப்பு கயிறு கட்டியிருந்தார் நெற்றியில் அரகஜா பொட்டு இருந்தது.
இப்படி எல்லாம் உப்பு சப்பில்லாத தகவல்களை இணையத்தில் வைரலாக்குவது அபத்தமாக உள்ளது. சினிமா கவர்ச்சியை கடந்து இனி விஜய் ஒரு முதல்வர் நாட்டை வழிநடத்த வேண்டிய தலைவர் பொறுப்பில் இருப்பவர் என்பதை விஜய் ஆதரவாளர்கள் உணரவேண்டும். அவரே இனி சினிமாவில் நடிக்கவில்லை என்று கூறிய நிலையில் மக்கள் இன்னும் மாறவில்லையா? நெட்டிசன்கள் கமெண்ட் செய்து விளாசி தள்ளுகின்றனர்.





