இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் கமல் ஸ்ரீதேவி நடித்த படம் சிகப்பு ரோஜாக்கள். இந்த படம் குறித்து பல ஆண்டுகளுக்கு முன்பு இயக்குனர் பாரதிராஜா ஒரு நேர்காணலில் கூறியதாவது, அதுவரை கிராமத்து படங்களை இயக்கிய நான் சிட்டி சப்ஜெக்ட் படத்தை எப்படி எடுப்பேன் என்று பத்திரிகைகளில் அப்போது எழுதினார்கள்.
முதல் 2 படங்களான 16 வயதினிலே கிழக்கே போகும் ரயில் 2 படங்களும் கிராமத்துக் கதை. இதில் 2வது படமான கிழக்கே போகும் ரயில் படம் ஒரு வருடத்துக்கு மேல் ஓடியது. சென்னை தேவி தியேட்டரில் ஒரு வருடத்தைக் கடந்து ஓடியது.
அந்தக் காலத்தில் தியாகராஜ பாகவதரின் ஹரிதாஸ் படம் ஒரு தீபாவளிக்கு வந்து அடுத்த தீபாவளி வரை ஓடியது. நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் என்பதாலும் இந்தக் கேள்வியை கேட்டிருந்தார்கள். அந்தக் கோபத்தோடு செய்ததுதான் சிகப்பு ரோஜாக்கள்.
நெகட்டிவ் ஆன கதையை 2 ஹீரோக்கள் ஒத்துக்கொள்ளவில்லை. கமல்தான் உடனே சம்மதித்தார். புதுமைகளைச் செய்வதில் அப்போதே கமல் அப்படித்தான். அந்த சிகப்பு ரோஜாக்கள் பங்களாவைத் தேடித் தேடி அலைந்தோம். தி.நகரில் ஒரு பங்களாவை பார்த்தோம். பிடித்திருந்தது. கமல் கேட்டதால் சம்மதித்தார்கள்.
மூன்றே நாளில் படத்தில் எங்கெல்லாம் ட்ராலி ஷாட் வருகிறதோ அவற்றை யுல்லாம் எடுத்து முடித்தேன். மொத்த படத்தையும் 20 நாளில் எடுத்து முடித்தேன். படத்தில் வரும் கறுப்புப் பூனை அதை ஒருவரிடமிருந்து வாங்கி வந்து படமாக்கினோம். 3வது நாள் பூனையைக் காணோம்.
அந்த பூனையை வளர்ப்பவர் என் மீது கேஸ் போட்டுவிட்டார். அவரை சமாதானப்படுத்தி கேஸை வாபஸ் வாங்கவைத்தோம். அந்தப் பூனை என்னானது என்றே இதுவரை தெரியவில்லை என்று அந்த நேர்காணலில் பாரதிராஜா கூறியிருக்கிறார்.





