தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷ நடிகர்களில் ஒருவர்தான் தேங்காய் சீனிவாசன். எம்ஜிஆர் சிவாஜி கணேசன் காலம் துவங்கி ரஜினி கமல் காலம் வரை ஏராளமான படங்களில் அவர் சிறப்பான நடிப்பை தந்தவர் குறிப்பாக தில்லு முல்லு படத்தில் அவர் இராமச்சந்திர மூர்த்தி என்ற கேரக்டரில் வாழ்ந்தே இருப்பார்.
காமெடியன் வில்லன் குணச்சித்திரம் என அனைத்து ரோல்களையும் தனது அசாத்திய நடிப்பால் வென்று காட்டியவர். தேங்காய் சீனிவாசனின் இயற்பெயர் சீனிவாசன். கல் மனம் என்ற நாடகத்தில் தேங்காய் வியாபாரியாக நடித்தார் சீனிவாசன். அந்த நாடகத்துக்கு டணால் தங்கவேலு தலைமை தாங்கினார். அவர் பேசும்போது, தேங்காய் வியாபாரியாக நடித்த சீனிவாசன் நன்றாக நடித்திருக்கிறார்.
இனிமேல் அவர் தேங்காய் சீனிவாசன் என்றே அழைக்கப்படுவார் என்று பாராட்டிய பிறகு அந்த பெயர் அப்படியே நிலைத்துவிட்டது. 40 வயதுக்குள் 400 படங்களில் நடித்தவர் தேங்காய் சீனிவாசன். சித்ராலயா கோபுவின் காசேதான் கடவுளடா படத்தில் போலிச்சாமியராக அப்பாசாமியாக அவர் நடித்தது, பட்டிதொட்டி எல்லாம் தேங்காய் சீனிவாசனின் புகழை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.
சினிமா நடிகர்களில் அன்று முதல் இன்று வரை சிலர் மதுப்பழக்கத்துக்கு ஆளானவர்களாக இருந்திருக்கின்றனர். மதுப்பழக்கம் புகை பழக்கம் தான் அவர்களது உடல் ஆரோக்கியத்தை கெடுத்து நீண்ட காலம் அவர்களை சினிமா கலைஞர்களாக வாழ விடாமல் தடுத்துள்ளது. இதனால் பல பொக்கிஷ நடிகர்களை தமிழ் சினிமா இழந்துள்ளது.
மக்கள் திலம் எம்ஜிஆரை தன்னுடைய கடவுளாகவே பார்த்தவர் தேங்காய் சீனிவாசன். ஆனால் எம்ஜிஆருக்கு பிடிக்காத மதுப்பழக்கம் மட்டும் தேங்காய் சீனிவாசனிடம் இருந்தது. ஒருமுறை குடிகாரன் என்ற படத்துக்கு தலைமை தாங்க எம்ஜிஆர் வந்தார். இந்த படத்தில் யார் ஹீரோ என்று கேட்டதற்கு தேங்காய் சீனிவாசன் என்றார்கள். உடனே எம்ஜிஆர், பொருத்தமான ஹீரோதான் என்று கூறியிருக்கிறார்.
ஆனால் தனது பட விழாவுக்கு எம்ஜிஆர் வரப்போகிறார் என்று தேங்காய் சீனிவாசனுக்கு தெரியாது. மேடையில் அவரை பார்த்ததுமே அப்படியே பதறி விட்டார். காரணம், நிஜமாகவே அப்போதும் மது குடித்துவிட்டு போதையில் இருந்தார் தேங்காய் சீனிவாசன். அப்போதே தேங்காய் சீனிவாசனை கண்டித்த எம்ஜிஆர், தொழில் செய்யும் இடத்தில் இப்படியா வருவது என்று பேசியிருக்கிறார்.





