தமிழ் சினிமாவில் 33 ஆண்டுகளாக நடிகராக வலம் வந்தவர் விஜய். கடைசி 15 ஆண்டுகளில் முன்னணி நட்சத்திர நடிகராக அவர் நடித்த படங்கள் எல்லாம் பெரிய அளவில் வெற்றி பெற்றன. குறிப்பாக தரணி இயக்கிய கில்லி படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜயின் மார்க்கெட் வேற லெவலுக்கு சென்று விட்டது.
நடிகர் விஜய் கடைசியாக நடித்த வாரிசு மாஸ்டர் பீஸ்ட் லியோ தி கோட் போன்ற படங்கள் வணிக ரீதியாக பெரிய அளவில் வசூலை குவித்தன. விமர்சன ரீதியாக இந்த படம் பெரிய வரவேற்பை பெறாத போதிலும் விஜய் நடித்த படம் என்கிற ஒரு தகுதியே இந்த படத்தை வியாபார ரீதியாக கணிசமான லாபத்தை கொடுத்துவிட்டன.
இந்த சூழலில் படத்தில் நடிப்பதை விட்டு விட்டு தமிழக வெற்றிக் கழகம் அரசியல் இயக்கத்தை துவங்கிய விஜய் இன்று தமிழக முதல்வராக பவனி வருகிறார். அவர் முதல்வராக பதவியேற்று நாளை ஒரு மாதம் நிறைவடைய உள்ளது. இந்நிலையில் அவருடன் வசீகரா தி கோட் படங்களில் ஜோடியாக நடித்த நடிகை சினேகா தனது கணவர் நடிகர் பிரசன்னா மற்றும் தங்களது 2 பிள்ளைகளுடன் இன்று முதல்வர் விஜயை நேரில் சென்று சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.
முதல்வர் விஜயை சினிமா துறை சார்ந்த பலரும் நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் பார்த்திபன் விஜயை சந்தித்தார். பிறகு நடிகர் பிரபு அவரது மகன் விக்ரம் பிரபு பிரபுவின் மருமகன் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் நேற்று முதல்வர் விஜயை நேரில் சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
முதல்வர் விஜய் இல்லத்தில் இன்று தனது கணவர் நடிகர் பிரசன்னா மற்றும் தனது 2 பிள்ளைகளுடன் நேரில் சென்று விஜயை சந்தித்தது குறித்து நடிகை சினேகா தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பதாவது, விஜய் சாருடன் இரண்டு படங்கள் பணியாற்றி இருக்கிறேன். இன்று தமிழகத்தின் முதல்வராக அவரை பார்க்கும் போது மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது.
சில தருணங்கள் நம்மை பேச்சு இல்லாமல் செய்யும். இந்த பயணம் வளர்ச்சி அவர் பெற்றுள்ள மரியாதை எல்லாம் மிகவும் உத்வேகம் அளிக்கிறது. இருந்தும் அவர் தற்போதும் கருணையுடன் மிகவும் எளிமையான எனக்குத் தெரிந்த அதே மனிதராக இருக்கிறார். அவருக்கு கூடுதல் பலமும் வெற்றியும் கிடைக்க வாழ்த்துகள் என்று சினேகா அந்த பதிவில் கூறியிருக்கிறார்.





