ஒவ்வொரு நடிகருக்கும் ஏதேனும் சில வித்யாசமான குணங்கள் இருக்கும். அவர்களுக்குள் சில சென்டிமென்டுகளும் இருக்கும். ஒரு நேரத்தில் ரஜினி நடித்த படங்களில் பாம்பு கட்டாயம் இடம்பெற்று விடும். பைரவி தம்பிக்கு எந்த ஊரு படங்களில் இருந்து அண்ணாமலை சந்திரமுகி வரை பல படங்களில் இந்த சென்டிமென்ட் கட்டாயம் வரும்.
இதுபோன்ற சென்டிமென்ட்டுகளை கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் ஒரு நட்சத்திர நடிகர் அவர் நடித்த படங்களை ஒருமுறை கூட முழுசாக பார்த்தது இல்லை என்று சொல்வது வேடிக்கையாக மட்டுமல்ல, விசித்திரமாக உள்ளது. அப்படி சொன்னவர் வேறு யாருமல்ல. நமது பாலிவுட் கிங் ஸ்டார் நடிகர் ஷாருக்கான் தான்.
இந்தியில் மட்டுமின்றி தமிழிலும் சில படங்களில் ஷாருக்கான் நடித்துள்ளார். குறிப்பாக நடிகர் கமலுடன் ஹே ராம் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். அதே போல் மணிரத்னம் இயக்கத்தில் உயிரே படத்திலும் நடித்திருந்தார். தற்போது ஜெயிலர் 2 படத்தில் அவர் நடிப்பதாக இருந்தது. ஆனால் நோ சொல்லி விட்டார்.
இந்நிலையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் கிங் என்னும் படத்தில் நடித்து வருகிறார். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வருகிற டிசம்பர் 24ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தில் ஷாருக்கானின் மகள் சுஹானாகாணும் தனது தந்தையுடன் சேர்ந்து நடித்துள்ளார்.
இந்த நிலையில் இயக்குனர் சாஜித்கான் தொகுத்து வழங்கும் யாரோன் கி பாரத் என்ற நிகழ்ச்சியில் நடிகர் ஷாருக்கான் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது, எனது சொந்த படங்களான தீவானா ஸ்வதேஸ் பரதேஸ் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை முழுமையாக நான் இதுவரை பார்த்ததில்லை. டப்பிங் மற்றும் எடிட்டிங் பணியின் போது மட்டும் சில காட்சிகளை பார்த்திருக்கிறேன்.
ஒரு ரசிகரை போல தியேட்டரிலோ வீட்டிலோ அமர்ந்து முழு படத்தையும் இதுவரை நான் ஒருமுறை கூட பார்த்ததில்லை என்று ஷாருக்கான் அப்போது கூறினார். மிகப்பெரிய நட்சத்திர நடிகரான ஷாருக்கான் அவர் நடித்த படங்களையே முழுமையாக பார்த்ததில்லை என்று கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.





