தமிழ் சினிமாவில் 1980 90களில் நட்சத்திர நடிகையாக வலம் வந்தவர் கௌதமி. ரஜினி கமல் விஜயகாந்த் சத்யராஜ் பிரபு கார்த்திக் சரத்குமார் ராமராஜன் கே பாக்யராஜ் டி ராஜேந்தர் என பல ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர். பிறகு திருமண வாழ்க்கையில் செட்டிலாகி கணவரை பிரிந்த அவர் பாஜக கட்சியில் இருந்தார்.
பிறகு அதிமுக கட்சிக்கு வந்தார். அங்கு கௌதமிக்கு மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் பதவி அளிக்கப்பட்டது. சில ஆண்டுகளாக அதிமுகவில் இருந்த கௌதமி சில தினங்களுக்கு முன்பு அதிமுகவில் இருந்து விலகி விட்டார், சமூக சேவை செய்ய விருப்பம் இருப்பதால் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவித்துக் கொள்வதாக கூறியிருந்தார்.
இந்நிலையில் நடிகை சமந்தா அவரே சொந்தமாக தயாரித்து கதாநாயகியாக நடித்துள்ள படம் மா இண்டி பங்காரம் என்ற தெலுங்கு படம் நாளை 19ம் தேதி ரிலீஸாக உள்ளது. தமிழில் இந்த படம் எங்கம் தங்கம் என்ற டைட்டிலில் வெளியாக உள்ளது. இது எம்ஜிஆர் ஜெயலலிதா நடித்த ஒரு படத்தின் டைட்டிலாகும்.
எங்கள் தங்கம் படத்தில் நடிகை சமந்தாவுடன் இணைந்து நடிகை கௌதமியும் நடித்திருக்கிறார். இந்த படத்தின் பிரமோசன் நிகழ்ச்சியில் சென்னையில் நேற்று நடந்தது. இதில் நடிகை சமந்தா படக்குழுவினர் கலந்துக்கொண்ட நிலையில் நடிகை கௌதமியும் இதில் பங்கேற்றார். அப்போது கௌதமி பேசியதாவது, இந்தப் படத்தில் நான் நடிக்க சம்மதிக்க காரணம் இந்த படத்தின் இயக்குனர் நந்தினியும் மற்றும் தயாரிப்பாளர் சமந்தாவும்தான்.
அவர்கள் பெண்கள் என்பதை தாண்டி போராளிகள். வலிமையானவர்கள். உண்மையானவர்கள். அவர்கள் யார் என்பது அவர்கள் செய்கிற வேலையின் மூலமே நமக்கு தெரியும். இந்த படத்தில் இவர்களுடன் வேலை செய்வது என் வழியில் நான் இவர்களுக்கு தெரிவிக்கிற ஒரு பாராட்டு. இந்த படத்துக்கு பின்னாலும் இந்த கதை படமாக மாறுவதற்கு பின்னாலும் இருக்கிற ஒவ்வொரு செயல்முறைகளிலும் சமந்தாவின் மிகப்பெரிய உழைப்பு இருந்துள்ளது.
பொதுவாக ஒரு படம் பெண்களின் அதிகாரத்தை பற்றி படம் எடுத்தால் அதை எல்லோரும் போற்றி பேசுவார்கள். ஆனால் இந்த படம் பெண்களுடைய அதிகாரத்தை பற்றியது இல்லை. இந்த படம் பாலினம் இல்லாத பொதுவான அதிகாரம் பற்றியது. பார்க்கிற எல்லோருக்கும் நிச்சயமாக இந்த படம் பிடிக்கும். அந்த வகையில்தான் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்காக உண்மையாக உழைப்பை தந்த அனைவருக்கும் இலக்குகளும் கனவுகளும் நிறைய இருக்கிறது என்று நடிகை கௌதமி பேசியிருக்கிறார்.





