நடிகர் அஜீத்குமார் நடிப்பில் கடைசியாக வெளியான படம் குட் பேட் அக்லி. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் டைரக்ட் செய்திருந்தார். கடந்த 7 மாதங்களாக கார் ரேஸில் தீவிர கவனம் செலுத்தி வரும் அஜீத்குமார், வரும் அக்டோபர் இறுதி வரை கார் ரேஸில் பங்கேற்றுவிட்டு வரும் நவம்பரில்தான் சென்னை திரும்புகிறார்.
அவரது அடுத்த படம் ஏகே 64 படத்தையும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்தான் டைரக்ட் செய்கிறார். இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பதாக முதலில் தகவல் பரவியது. இதில் நடிகர் அஜீத்குமார் சம்பளம் மட்டுமே 180 கோடி ரூபாய் என்று சொல்லப்பட்ட நிலையில், பட்ஜெட் 300 கோடி ரூபாயை தாண்டியதால் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இந்த படத்தில் இருந்து விலகி விட்டார்.
தொடர்ந்து சன் பிக்சர்ஸ் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் சத்யஜோதி பிலிம்ஸ் ஏசியன் பிக்சர்ஸ் மைத்ரி மூவி மேக்கர்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களிடம் அஜீத்குமார் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், எந்த நிறுவனமும் ஏகே 64 படத்தை தயாரிக்க முன்வரவில்லை. இந்த சூழலில் ரோமியோ பிக்சர்ஸ் வினியோகஸ்தர் ராகுல் இந்த படத்தை தயாரிக்க முன்வந்துள்ளது.
ஆனால் வினியோகஸ்தரான அவர் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படத்தை எப்படி தயாரிக்க முடியும் என்ற கேள்வி எழுந்த நிலையில், இப்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி இந்த ஏகே 64 படத்தை பொறுத்த வரை தியேட்டர் ரிலீஸ் உரிமையை மட்டுமே படத்தின் தயாரிப்பாளர் ராகுல் எடுத்துக்கொள்வது என்றும் நான் தியேட்டரிக்கல் உரிமையை நடிகர் அஜீத்குமார் வைத்துக்கொள்வது என்றும் முடிவானதாக கூறப்படுகிறது.
அதாவது ஓடிடி டிஜிட்டல் ரைட்ஸ் வியாபாரம் சாட்டிலைட் உரிமம் மற்றும் ஆடியோ ரிலீஸ், ஓவர்சீஸ் ரிலீஸ் போன்றவை மூலம் கிடைக்கும் மொத்த வருவாய் நடிகர் அஜீத்குமாருக்கும், தியேட்டர்களில் ரிலீஸ் செய்யும் உரிமையில் தயாரிப்பாளர் ராகுலுக்கு கிடைக்கும் லாபம் அவருக்கு சொந்தம் என்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இப்படி செய்வதன் மூலம் இந்த படத்தை அதிகபட்சம் 120 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ராகுல் எடுத்து முடித்துவிட முடியும் என்று சொல்லப்படுகிறது. அப்படி என்றால் நடிகர் அஜீத்குமார் தனது சம்பளத்தை விட்டுத் தந்து, அதற்கு பதிலாக படம் முடிந்த பிறகு, நான் தியேட்டரிக்கல் மூலம் வரும் லாபத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் இந்த புதிய நடைமுறை. ஆனால் இதுபோன்ற விஷயங்களுக்கு அஜீத்குமார் ஒத்துக்கொள்வாரா, அல்லது படக்குழுவே இப்படி ஒரு வதந்தியை கிளப்பி விட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.





