அமரன் திரைப்படம் கொடுத்த அபார வெற்றியின் மகிழ்ச்சியில் உள்ளார் சிவகார்த்திகேயன். தீபாவளியை முன்னிட்டு கடந்த மாதம் 31ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதுவும் வார இறுதி நாட்களில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக அமரன் சக்கை போடு போடுகிறது.
படம் இதுவரை 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்திருப்பதால் தயாரிப்பாளர் கமல்ஹாசனும் சந்தோசத்தில் இருக்கிறார். இந்த ஒரு திரைப்படத்தின் மூலம் சினிமாவின் அடுத்த கட்டத்திற்கு சென்ற சிவகார்த்திகேயனின் மார்க்கெட், தாறுமாறாக உயர்ந்திருக்கிறது. அதேசமயம் தனது அடுத்தடுத்த படங்களுக்கான வேலைகளிலும் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
ஏ ஆர் முருகதாசு உடன் அவர் இணைந்து பணியாற்றிய திரைப்படத்தின் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இதன் பிறகு சிபி சக்கரவர்த்தியுடன் அவரை இணைகிறார். ஏற்கனவே இந்த கூட்டணி டான் திரைப்படத்தை கொடுத்து 125 கோடி ரூபாய் வசூல் ஈட்டியது. இரண்டாவது முறையாக தற்போது இவர்கள் இணைந்திருப்பதால், படம் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தப் படத்தை முடித்த கையோடு அடுத்ததாக சுதா கொங்கராவுடன் கைகோர்க்கிறார் சிவகார்த்திகேயன். இது அவரின் 25 ஆவது திரைப்படமாக எடுக்கப்படுகிறது. ஏற்கனவே சூர்யாவை வைத்து சுதா கொங்கரா புறநானூறு என்னும் படத்தை எடுக்க இருந்தார். தற்போது அந்த கதை தான் சிவகார்த்திகேயனிடம் சென்று இருக்கிறது.
அதேபோல் இதில் துல்கர் சல்மான், விஜய் வர்மா மற்றும் நஸ்ரியா ஆகியோர் நடிப்பதாக இருந்தது. தற்போது துல்கர் சல்மான் கதாபாத்திரத்தில் அதர்வாவும், நஸ்ரியா ரோலில் ஸ்ரீ லீலாவும் இணைய இருக்கிறார்கள். விஜய் வர்மா கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் ஜெயம் ரவி. இது வில்லன் கேரக்டர் என்று கூறப்படுகிறது.
இப்படியான சூழலில் அதற்காக சில நிபந்தனைகளை ஜெயம் ரவி விதித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது, நான் கேட்ட சம்பளத்தை கொடுக்க வேண்டும், சிவகார்த்திகேயன் என்னை தாக்குவது போன்ற காட்சி வரக்கூடாது, நீங்கள் கூறிய தேதியில் என்னை நடிக்க வைக்க கட்டாயப்படுத்தக் கூடாது, விளம்பரங்களில் சிவகார்த்திகேயனுக்கு இணையான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என ஜெயம் ரவி கூறி இருப்பதாக தெரிகிறது. இந்த திரைப்படத்திற்காக அவர் 25 முதல் 30 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. அண்மைக்காலமாக ஜெயம் ரவியின் திரைப்படங்கள் படுதோல்வியை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.





