தமிழக முதல்வர் விஜய் குறித்து தொடர்ந்து கடுமையான விமர்சனங்கள் தமிழக அரசியல் களத்தில் இருந்து வருகின்றன. 108 இடங்களில் வெற்றி பெற்ற அவர் இப்போது திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்களின் ஆதரவுடன்தான் தமிழக சட்டசபையில் முதல்வராக இருந்து வருகிறார் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மைதான்.
எனினும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏக்களுக்கு முக்கிய அமைச்சர் பதவிகளை வழங்கி ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்று தேர்தலுக்கு முன்பு அன்று சொன்னதை விஜய் இப்போது நிறைவேற்றி காட்டியிருக்கிறார். இதற்கு முன்பு அதிமுக திமுக ஆட்சிகளின் போது இப்படி ஆட்சி அதிகாரத்தில் கூட்டணி கட்சிகளுக்கு பங்கு தந்தது இல்லை.
எனினும் அவ்வப்போது முதல்வர் விஜயின் அரசியல் செயல்பாடுகள் கடும் விமர்சனத்தை சந்திக்கின்றன. தனது ஆஸ்தான ஜோதிடர் ஒருவரை அவர் அரசு பதவியில் அமர்த்தியது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. அதன்பிறகு ஒரே நாளில் அந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டு விட்டது. அதே போல் தனது உதவியாளர் ஜெகதீஷ் என்பவருக்கும் அவர் அரசு பதவி தந்திருப்பதும் விமர்சனமாகி வருகிறது.
மேலும் தற்போது ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளரை தமிழ்நாடு அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதியாக தமிழக அரசு அறிவித்து ஆணை பிறப்பித்துள்ளது. கர்நாடகாவை சேர்ந்த ஒரு சினிமா தயாரிப்பாளரை, அமைச்சருக்கு இணையான ஒரு பதவியில் அமர்த்தியிருப்பதற்கும் தமிழக அரசியல் கட்சிகள் பலத்த எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றன.
தமிழக முதல்வர் விஜய் குறித்து தொடர்ந்து கடுமையாக விமர்சனம் செய்து வருபவர் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய ஜேம்ஸ் வசந்தன் கூறியதாவது, விஜய் வந்த பிறகுதான் நாங்க எல்லாம் அரசியல் பேச ஆரம்பிச்சுட்டோம்ன்னு சொல்லிட்டு திரியுறாங்க. அவங்க அரசியல்ல விஜயை ஃபாலோ பண்ணலே. இன்னமும் நடிகரை தான் ஃபாலோ பண்ணிட்டு இருக்காங்க.
இன்னமும் விஜய் கார்ல போறதை லைவ்ல பார்க்கறது, ஆபீஸ்ல அவர் டிபன் சாப்பிடுவது போன்ற ஏஐ போட்டோவை பார்த்துட்டு அரசியலை ஃபாலோ பண்றதா நினைச்சுட்டு இருக்காங்க. விஜய் என்ன பண்றாருன்னு பாக்குறதை விட்டுட்டு அவர் முதலமைச்சரா நாட்டுக்கு என்ன திட்டம் கொண்டு வந்தார், அவர் இன்னும் என்ன நல்லது பண்ணினார்ன்னு பார்க்கிறது தான் அரசியல் என்று இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அந்த நேர்காணலில் ஆவேசமாக கூறியிருக்கிறார்.





