இயக்குனர் இமயம் பாரதிராஜாவால் சினிமாவுக்குள் வந்தவர் கே பாக்யராஜ். 16 வயதினிலே கிழக்கே போகும் ரயில் சிகப்பு ரோஜாக்கள் போன்ற படங்களில் அவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த கே பாக்யராஜ். திரைக்கதை வசனகர்த்தாவாகவும் இருந்துள்ளார். மேலும் இந்த படங்களில் சின்ன சின்ன காட்சிகளிலும் அவரை பாரதிராஜா நடிக்க வைத்திருந்தார்.
இந்நிலையில் புதிய வார்ப்புகள் படத்தில் கே பாக்யராஜை ஹீரோவாகவும் நடிக்க வைத்தார் பாரதிராஜா. அதன்பிறகு சுவரில்லாத சித்திரங்கள் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான கே பாக்யராஜ் அடுத்தடுத்து அவர் இயக்கிய படங்களில் அவரே ஹீரோவாகவும் நடித்து பெரிய வரவேற்பை பெற்று நட்சத்திர நடிகராக மாறினார்.
புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் தீவிர ரசிகராக இருந்த கே பாக்யராஜ், எம்ஜிஆரின் அன்பை பெற்றார். ஒருகட்டத்தில் என்னுடைய கலையுலக வாரிசு கே பாக்யராஜ் என்றும் எம்ஜிஆர் அறிவித்தார். அந்தளவுக்கு எம்ஜிஆரின் மிக தீவிரமாக விசுவாசியாக இருந்தவர். அன்றைய காலகட்டத்தில் அதிமுக ஆதரவு பேச்சாளராகவும் கே பாக்யராஜ் இருந்திருக்கிறார்.
கடந்த 1977ம் ஆண்டில் இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் எம்ஜிஆர் லதா நடித்து எடுக்கப்பட்ட படம் அண்ணா நீ என் தெய்வம். இந்த படம் குறிப்பிட்ட சில முக்கிய காட்சிகள் மட்டுமே எடுக்கப்பட்ட நிலையில் நடிகராக இருந்த எம்ஜிஆர் தமிழகத்தின் முதல்வர் ஆகிவிட்டார். அதனால் இந்த படம் அப்படியே கைவிடப்பட்டது.
அப்படி பாதியில் கைவிடப்பட்ட அண்ணா நீ என் தெய்வம் படத்தின் 4000 அடி பிலிம் ரீல்களை வாங்கி எடுக்கப்பட்ட அந்த காட்சிகளுக்கு ஏற்றபடி ஒரு திரைக்கதையை எழுதினார் இயக்குனர் கே பாக்யராஜ். அப்படி அவர் உருவாக்கிய படம்தான் அவசர போலீஸ் 100. அவசர போலீஸ் 100 படத்தில் 2 வேடங்களில் கே பாக்யராஜ் நடித்திருந்தார். இதில் நம்பியாரும் வில்லனாக நடித்திருந்தார். கௌதமி சில்க் ஸ்மிதா நாயகிகளாக நடித்திருந்தனர். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.
எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு வெளியான ஒரே எம்ஜிஆர் படம் இதுதான். கைவிடப்பட்ட ஒரு படம் மறு ஜென்மம் எடுத்ததெல்லாம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஒரு சம்பவமாக இருந்தது. அதை நிகழ்த்திக் காட்டியவர் இயக்குனர் மற்றும் நடிகர் கே பாக்யராஜ் ஒருவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.





