தமிழ் சினிமா ரசிகர்களால் ஒரு மறக்க முடியாத திரைக்கலைஞர் நடிகர் முத்துராமன். கடந்த 1960 – 70களில் ஏராளமான தமிழ் படங்களில் நடித்தவர். கருப்பு வெள்ளை படங்கள் காலகட்டத்தில் எம்ஜிஆர் சிவாஜி கணேசன் போன்றவர்களுடன் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக காசேதான் கடவுளா போன்ற காமெடி படத்திலும் நடித்திருக்கிறார்.
இயக்குனர் கே பாலசந்தர் இயக்கத்தில் நாகேஷ் ஹீரோவாக நடித்த எதிர்நீச்சல் படத்தில் நாயர் கேரக்டரில் முத்துராமன் நடிப்பில் அசத்தியிருப்பார். அதே போல் சர்வர் சுந்தரம் படத்திலும் நாகேஷின் நண்பராக முத்துராமன் நடித்திருப்பார். சிவாஜிக்கு பிறகு ஒரு சிறந்த நடிகர் முத்துராமன் என்று எம்ஜிஆரே கூறியதாக ஒருமுறை கவிஞர் வாலி கூறியிருக்கிறார்.
நடிகர் முத்துராமனின் மகன் நடிகர் கார்த்திக். நவரச நாயகன் கார்த்திக் என்று ரசிகர்கள் அவரை அழைத்தனர். நடிகர் கமல்ஹாசனுக்கு பிறகு மிகவும் நேர்த்தியான அற்புதமான நடிப்பு கலைஞன் என்றால் அது கார்த்திக் தான். அலைகள் ஓய்வதில்லை படத்தில் இயக்குனர் பாரதிராஜா கார்த்திக்கை அறிமுகம் செய்து வைத்தார்.
கடந்த 1980 90களில் நடிகர் கார்த்திக் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வந்தார். பல வெற்றிப் படங்களை கொடுத்தார். இப்போது அவரது மகன் கௌதம் கார்த்திக்கும் சினிமாவில் நடித்து வருகிறார். ஆனால் அவர் தனது தாத்தா முத்துராமன் அப்பா கார்த்திக் போல நடிப்பில் பெரிய அளவில் இன்னும் ஜொலிக்காமல் இருந்து வருகிறார். அது அவருக்கே ஏமாற்றமாக தான் உள்ளது. இதற்கிடையே முத்துராமலிங்கம் படத்தில் அவர் நடித்தது கடும் விமர்சனத்தை தந்தது.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் கௌதம் கார்த்திக் கூறியதாவது, முத்துராமலிங்கம் படத்தோட கதை ரொம்பவும் பழசு. அந்த படத்துல நடிச்சதுக்காக நான் ரொம்பவே வருத்தப்பட்டேன். என்னோட சினிமா வாழ்க்கையில் அது என்னுடைய பெரிய தவறு. அறிவும் புரிதலும் இல்லாமல் இருந்ததுதான் காரணம்.
அதனால் அந்த படத்தை பொருத்தவரைக்கும் அது என்னோட வாழ்க்கையிலேயும் கேரியர்லேயும் படங்கள் பட்டியலேயும் ஒரு பெரிய தோல்வின்னு நினைக்கிறேன். அதுக்கு அப்புறம் அந்த மாதிரியான படங்களை நான் கவனமாக தவிர்க்க ஆரம்பிச்சிட்டேன் என்று நடிகர் கௌதம் கார்த்திக் அந்த நேர்காணலில் ஆதங்கமாக கூறியிருக்கிறார்.





