இந்தியாவில் இலக்கியத்துக்கு உயர்ந்த பட்சமாக வழங்கப்படும் ஞான பீடம் விருது இந்த ஆண்டில் கவிஞர் வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் மொழி சார்ந்த இலக்கியவாதி பெற்றிருக்கும் மூன்றாவது ஞானபீட விருது இதுவாகும்.
இந்த ஞானபீட விருதை இதற்கு முன்பு எழுத்தாளர்கள் அகிலன் மற்றும் ஜெயகாந்தன் ஆகியோர் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1975ம் ஆண்டு எழுத்தாளர் அகிலன் 2002ம் ஆண்டு எழுத்தாளர் ஜெயகாந்தன் ஆகிய 2 பேருக்கு மட்டுமே ஞானபீடம் விருது வழங்கப்பட்டுள்ளது. தற்போது தமிழ்நாட்டில் இருந்து 3வது கவிஞராக வைரமுத்து இந்த விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அவரது பிறந்தநாளில் இந்த ஞானபீடம் விருது அவருக்கு வழங்கப்பட்டது சிறப்பாகும்.டெல்லியில் நடந்த விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் கரண் சிங் கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீடம் விருதை வழங்கினார். ஞானபீடம் அமைப்பைச் சேர்ந்த சாகு அகிலேஷ் ஜெயின் ஸ்ரீ முதத் ஜெயின் பிரதீபா ராய் ஆர்.என் திவாரி உள்ளிட்ட பலர் இந்த விழாவில் பங்கேற்றனர்.
ஞானபீட விருதை பெற்றுக் கொண்ட கவிஞர் வைரமுத்து விழாவில் ஏற்புரை ஆற்றினார். அப்போது கவிஞர் வைரமுத்து பேசியதாவது, என் அரை நூற்றாண்டு எழுத்துக்களை பாராட்டி ஞானபீடம் 60 கிராம் அமிர்தபுட்டி வழங்கி இருக்கிறது. இந்த விருது என்னை சாய்வு நாற்காலியில் சாய்த்து விடாது. இது ஓடி வந்த குதிரைக்கு நீட்டப்படும் புல் அல்ல. குதிரை மீது விழுந்த மற்றும் ஒரு சாட்டையடி.
குதிரை இன்னும் வேகம் எடுக்கும். நான் வெறிகொண்டு ஓடுவேன். இந்த விருதுக்கு என் தமிழ் இன்னும் நியாயம் செய்யும். எனக்கு சில கேள்விகள் உண்டு. இலக்கியத்திற்காக இந்தியா ஒரே ஒரு நோபல் பரிசு பெற்று 113 ஆண்டுகள் கடந்துவிட்டன. அதன்பிறகு நோபல் பரிசு பெற தகுதியான ஒரு படைப்பாளியை இந்தியா தயாரிக்கவில்லையா? அல்லது நோபல் குழு கண்டுபிடிக்கவில்லையா?
ஏகப்பட்ட உலக அழகிகளை தயாரித்த இந்தியா உலகக் கவிகளை தயாரிக்க மறந்ததா? ஒவ்வொரு தொழில்நுட்பத்துக்கும் ஒவ்வொரு பல்கலைக்கழகம் காணும் நாம் இலக்கியத்திற்கென்று தனியே ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவக் கூடாதா? அது எப்போது? இந்த கேள்விகளோடு என் ஏற்புரையை நிறைவு செய்கிறேன். இந்த விருதுக்கு என்னை தகுதிபடுத்திய ஒவ்வொரு சமூக மனிதனுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கவிஞர் வைரமுத்து அந்த விழாவில் பேசியிருக்கிறார்.





