கடந்த 1990களில் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகையாக வலம் வந்தவர் ரோஜா. கடந்த 12 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் தமிழ் சினிமாவில் அன்பே டயானா படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். தமிழில் மீண்டும் ஒரு ரவுண்டு அம்மா நடிகையாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 1992ம் ஆண்டில் இயக்குனர் ஆர்கே செல்வமணி இயக்கிய செம்பருத்தி படத்தில் அறிமுகமான ரோஜா, 8 ஆண்டுகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். அவர் நடித்த 100வது படம் பொட்டு அம்மன். ஆந்திரா அரசியலில் எம்எல்ஏ அமைச்சராக பதவி வகித்த ரோஜா, இப்போது அரசியலை மறந்து விட்டு மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி தந்திருக்கிறார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை ரோஜா கூறியதாவது, நாங்கள் பல படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு இருந்த அந்த காலகட்டத்தில் கேரவன் வசதி எல்லாம் கிடையாது. அதனால் செடிகளுக்கு கீழே உட்காருவோம். பெரிய குடை போல வெச்சுக்கிட்டு கீழே உட்காருவோம். டிரஸ் சேஞ்ச் என்றால் நான்குபுறமும் சேலைகளை கட்டி மறைத்துக்கொண்டு ஆடைகளை மாத்திக்குவோம்.
அந்த மாதிரி நாங்க எல்லாம் கஷ்டப்பட்டு வந்தோம். இப்போது இருப்பவர்களை பார்த்தீர்கள் என்றால் நார்மல் ஆர்ட்டிஸ்ட் கூட எல்லோருக்கும் கேரவன் இருக்கு. டக் டக்குன்னு கேரவன்ல ஏறிடறாங்க. நமக்கு அப்படி கேரவன்ல உட்காரணும் என்றால் முடிய மாட்டேங்குது.
செட்டுல உட்கார்ந்து யார் என்ன ஆக்ட் பண்றாங்க? அதுக்கு நாம என்ன ரியாக்ட் பண்ணனும். அதை தான் நாங்கள் கத்துக்கிட்டோம். இப்பவும் போர் அடிக்குது. ரொம்ப நேரம் தனியா உட்கார முடியாது. அன்பே டயானா படத்துல எப்பவும் செட்டுல தான் இருந்தோம்.
எல்லாரும் இருந்தால் நாமும் இருக்கலாம் இல்லே. ஏன்னா அப்போ ஜாலியா இருக்கும். எல்லாரும் கேரவனுக்கு போயிட்டா நாம என்ன பண்ண முடியும்? இந்த படம் பண்ணும்போது அந்த காலத்துல நம்முடைய எக்ஸ்பீரியன்ஸ் எல்லாம் எனக்கு நினைவுக்கு வந்தது என்று நடிகை ரோஜா அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





