சினிமா என்பது எப்போதுமே பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமே பார்க்கப்படுகிறது. ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு சினிமாவை அவரவர் இஷ்டம் போல தங்களது ஒரு தலைபட்சமான கருத்துக்களை திணிக்கும் ஒரு ஊடகமாக மாற்றிவிட்டனர் என்ற குற்றச்சாட்டு இன்றைய சமூகத்தில் நிலவுகிறது.
ஏனென்றால் ஒரு திரைப்படத்தை பார்க்க சென்றால் அதிலுள்ள காமெடி காதல் குடும்பம் உறவுகளின் உணர்வுகள் சமூக பிரச்சனைகள் ஆக்சன் சென்டிமென்ட் என பல விஷயங்கள் மனதுக்கு நெருக்கத்தை ஏற்படுத்துவதுடன் ஏதேனும் ஒரு விதத்தில் அந்த படம் நல்ல ஒரு கருத்தை மக்களுக்கு உணர்த்த வேண்டும். அப்படித்தான் தமிழ் சினிமாவில் முந்தைய படங்கள் இருந்தன.
இயக்குனர்கள் விசு வி சேகர் கே பாலச்சந்தர் பாரதிராஜா பாலு மகேந்திரா மகேந்திரன் போன்றவர்கள் அப்படிப்பட்ட படங்களை தான் ரசிகர்களுக்கு தந்தார்கள். அந்த வரிசையில் கே பாக்யராஜ் பாண்டியராஜன் எஸ்பி முத்துராமன் போன்றவர்களும் மக்களை சிரிக்க வைக்கவும் சிந்திக்க வைக்கவும் நல்ல சிறப்பம்சம் கொண்ட திரைக்கதைகளை உருவாக்கி திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்களை சந்தோஷப்படுத்தினார்கள்.
ஆனால் இப்போது ஜாதி பிரச்சனைகள் அடிப்படை உரிமைகளை பேசும் படங்கள் தமிழ் சினிமாவில் அதிகரித்துவிட்டன. குறிப்பாக இயக்குனர்கள் பா ரஞ்சித் மாரி செல்வராஜ் வெற்றிமாறன் போன்றவர்கள் தங்களது கருத்துக்களை சமுதாய உணர்வுகளை ரசிகர்களுக்கு திணிப்பதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனினும் அவர்கள் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் பெரிய வரவேற்பை பெறுகின்றன.
இதுகுறித்து நடிகர் சரத்குமார் ஒரு நேர்காணலில் கூறியதாவது, இயக்குனர்கள் மாரி செல்வராஜ் பா ரஞ்சித் சாதி படங்கள் எடுத்து மக்களை தூண்டறாங்கன்னு நாம விமர்சனம் செஞ்சிட்டு இருக்கோம். ஹாலிவுட்ல யூதர்கள் ஆதிக்கம் செலுத்தும் படங்களில் கருப்பின மக்களுக்கு என்ன செஞ்சாங்க? அவங்க அனுபவிக்கும் வலியை காட்டுறாங்க. அந்த வலியை அவங்க மனசுல இருந்து அழிக்க முடியாது.
நீங்க ஏன் இப்படி படம் எடுக்குறீங்கன்னு கேலி செய்யக்கூடாது. அவங்க அனுபவத்தை வலியை நாம ஏத்துக்கிட்டு தான் ஆகணும். சினிமாவை ஒரு சினிமாவா பாருங்க. மாரி செல்வராஜ் படம் வாழை பரியேறும் பெருமாள் பார்த்தேன். அவர் ரொம்ப அற்புதமான படங்களை கொடுத்திருக்கிறார். நான் பார்த்ததுல அவர் ஒரு மிகச் சிறந்த இயக்குனர் என்று நடிகர் சரத்குமார் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





