தமிழக சட்டசபையில் நேற்று முன்தினம் 110 வது விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை முதல்வர் விஜய் வெளியிட்டார். தமிழகத்தில் உலக அளவிலான கார் பந்தய விளையாட்டுப் போட்டிகளுக்கான கார் உற்பத்தி ஆலைகளையும் அதற்கு தேவையான உப தொழிற்சாலைகளையும் அமைக்க தேவையான சூழல் உள்ளது.
உலகத்தரம் வாய்ந்த மோட்டார் வாகன கார் பந்தய அரங்குகளை அமைப்பதன் மூலம் சுற்றுலா சிறப்பு வாகன உற்பத்தி தொழிற்சாலைகள் வேலைவாய்ப்பு பொருளாதாரம் மேம்பட வாய்ப்புகள் உள்ளன. விளையாட்டு சுற்றுலாவை மேம்படுத்தவும் தமிழக இளைஞர்களிடையே மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீதான ஆர்வத்தை ஊக்குவித்து பயிற்சிகள் வழங்கவும் புதிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் உருவாக்கப்படும் என்று அறிவித்தார்.
இந்த நகரத்தில் சர்வதேச தரத்திலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் பந்தயத் தடம் அதற்கான நவீன உள்கட்டமைப்பு வசதிகள் பயிற்சிகள் ஏற்படுத்தப்பட்டு ஃபார்முலா 1 முதல் ஃபார்முலா 4 வரையிலான சர்வதேச போட்டிகள் நடத்த கட்டமைப்புகள் உருவாக்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்தார். இதற்கு தொடர்ந்து கார் ரேஸ்சில் ஈடுபட்டு வரும் நடிகர் அஜீத்குமார் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
அதில் மோட்டார் பந்தயம் உள்ளிட்ட அனைத்து விளையாட்டுத்துறைகளுக்கும் மிகவும் தேவையான கவனத்தை அளித்ததற்காக முதல்வர் விஜய்க்கு என் மனமார்ந்த நன்றி. தற்போது மோட்டார் பந்தயத்தில் ஈடுபட்டுள்ள நான், விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங்கின் ஒரு மேற்கோளை மீண்டும் கூற விரும்புகிறேன். தமிழக அரசின் ஒரு சிறிய அடி இந்தியாவில் மோட்டார் பந்தயத்திற்கு ஒரு மாபெரும் பாய்ச்சல். விஜயின் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற வாழ்த்துகள் என்று நடிகர் அஜீத்குமார் கூறியிருந்தார்.
இதைப் பார்த்து அஜீத்குமார் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். நடிகர் விஜய் தான் நமக்கு பரம விரோதி என்ற மனநிலையில் அவர்கள் பல ஆண்டுகளாக இருந்து வருகின்றனர். விஜய் மீது அவர்களுக்கு உள்ள வெறுப்பும் அதிருப்தியும் கோபமும் இன்னும் தீரவில்லை. ஏனெனில் அஜீத் ரசிகர்களை விஜய் ரசிகர்கள் பலமுறை சீண்டி பார்த்து இணையத்தில் அசிங்கப்படுத்திய கோபம் அவர்களுக்கு இன்னும் குறையவில்லை.
இந்த சூழலில் நடிகர் அஜீத்குமார் மாண்புமிகு முதல்வர் என்று கடிதம் எழுதிய அவரை பாராட்டியது அஜீத் ரசிகர்களை கடும் கோபத்தில் தள்ளியுள்ளது. விஜய்க்கு எதிராக உங்களுக்கு ஆதரவாக இத்தனை ஆண்டுகளாக நான் இருக்கிறோம். நீங்கள் இப்படி விஜய்க்கு நன்றி தெரிவிப்பதும் வாழ்த்துகள் சொல்வதும் என்ன நியாயம் என்று தாறுமாறாக இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். இதுதான் இப்போது இணையத்தில் டிரண்டிங்கில் உள்ளது.





