தமிழ் சினிமாவில் இயக்குனர்களை பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டைலும் பாஃர்மூலாவும் இருக்கிறது. அந்த வகையில் தான் அவர்கள் தங்களது படங்களை டைரக்ட் செய்து எடுத்து முடிக்கிறார்கள். சில இயக்குனர்கள் சில மாதங்களில் முடிக்க வேண்டிய படங்களை வருடக் கணக்கில் நீடித்து விடுகின்றனர்.
உதாரணமாக இயக்குனர்கள் ஷங்கர் வெற்றிமாறன் மிஷ்கின் போன்றவர்கள் ஒரு படத்தை எடுத்து முடிக்க 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.இப்படி வருட கணக்கில் படங்கள் ஷூட்டிங்கை நீடிப்பதால் தயாரிப்பாளருக்கு திட்டமிட்டதை விட அதிகமான செலவு ஏற்படுகிறது. வாங்கிய கடனுக்கும் அதிகமான வட்டி செலுத்த வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
அத்துடன் ஹீரோ நடிகர்களும் பல மாதங்களுக்கு கால்சீட் ஒதுக்கி தர வேண்டி இருக்கிறது. குறிப்பிட்ட கெட்டப்பில் கேரக்டரில் நடிக்க வேண்டிய ஹீரோக்கள் அதே தோற்றத்தில் இருக்க வேண்டிய நிர்பந்தம் இருப்பதால் மற்ற படங்களில் கமிட் ஆகி நடிக்க முடியாத சூழலும் ஏற்படுகிறது.
அதனால் குறிப்பிட்ட சில மாதங்களுக்குள் படத்தை இயக்கி முடிக்கும் இயக்குனர்களுக்கு சினிமாவில் தயாரிப்பாளர்களும் நடிகர்களும் அதிக முக்கியத்துவம் தருகின்றனர். அவர்களது படங்களில் நடிக்கவும் உடனடியாக ஹீரோக்கள் சம்மதிக்கின்றனர். அந்த வரிசையில் இயக்குனர் மணிரத்னம் ஆரம்பத்தில் இருந்தே குறுகிய காலத்தில் படம் எடுத்து முடிப்பவர் என்ற பெயர் பெற்றவர்.
அவரது இயக்கிய திரைப்படங்கள் எல்லாம் குறைந்தபட்சம் 50 முதல் 60 நாட்களுக்குள் எடுத்து முடிக்கப்பட்டு விடும். அதுமட்டுமின்றி படத்தின் வளவள என கேரக்டர்கள் பேசவும் மாட்டார்கள். இதற்கு அவர் பின்பற்றும் முக்கியமான ஃபார்மூலா என்பது இதுதான். தனது கேரக்டர்களை முதலிலேயே ரிகர்சல் பார்த்து அவர்கள் எப்படி நடிக்க வேண்டும் என்பதை முன்பே சொல்லி தந்து விடுவார்.
டயலாக் எந்த மாடுலேசனில் பேச வேண்டும் என்பதையும் முன்பே கற்றுத் தந்து, அதற்கான ஸ்கிரிப்ட் பேப்பர்களையும் தந்து அவர்களை முழுமையாக அந்த கேரக்டருக்கு மாற்றி விடுவார். அதனால் படப்பிடிப்பு தளத்தில் அன்று அன்று திட்டமிட்ட காட்சிகளை மள மள என எடுத்து முடித்து விடுவார். எந்தவிதமான திருத்தங்களோ மாற்றங்களோ இல்லாமல் திட்டமிட்டபடி அவரது படம் திரையில் உருவாகி விடுகிறது. இதுதான் மணிரத்னம் வெற்றிக்கான ஃபார்மூலாவாக உள்ளது.





