ஆரம்ப காலத்தில் மும்பையில் மிகவும் இளம் நாயகியாக நடிகை குஷ்பு பல திரைப்படங்களில் இந்தியில் நடித்திருக்கிறார். பிறகு தமிழில் ரஜினிகாந்த் பிரபு இணைந்து நடித்த தர்மத்தின் தலைவன் என்ற படத்தில் இளம் நாயகியாக அறிமுகமானார். இந்த படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக அவர் நடித்திருந்தார்.
தமிழ் சினிமாவில் ஒரு கட்டத்தில் குறிப்பாக 1990களில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக குஷ்பு இருந்தார் என்றால் அது மிகையல்ல. கதாநாயகிகளில் முதலில் அதிக கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்கடித்தவர் குஷ்பு தான். குஷ்புவுக்கு கோவில் கட்டும் அளவுக்கு ரசிகர்கள் அவர் மீது அதிக ஆர்வம் காட்டினர்.
அதன்பிறகுதான் நக்மா மீனா ரோஜா ரம்பா என வந்த இளம் நாயகிகள் பலரும் நடிப்புடன் கவர்ச்சியும் தாராளமாக தமிழ் சினிமாவில் காட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்த் கமல்ஹாசன் விஜயகாந்த் பிரபு கார்த்திக் அர்ஜூன் சத்யராஜ் சரத்குமார் முரளி பார்த்திபன் பாண்டியராஜன் என பல ஹீரோக்களுக்கு ஜோடியாக குஷ்பு நடித்திருக்கிறார்.
இதில் இயக்குனர் கே பாக்யராஜ் நடித்த அம்மா வந்தாச்சு படத்தில் குஷ்பு கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தை பி வாசு டைரக்ட் செய்திருந்தார். கே பாக்யராஜூடன் குஷ்பு இணைந்து நடித்தது இந்த ஒரு படம் மட்டும்தான். கே பாக்யராஜ் இயக்கி நடித்த சூப்பர் ஹிட் படம் இது நம்ம ஆளு. இந்த படத்தில் நடிகை ஷோபனா கதாநாயகியாக நடித்திருந்தார்.
இதுகுறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை குஷ்பு கூறியதாவது, நிறைய பேருக்கு இது தெரியாது. நான் மும்பையில் இருந்து தமிழ் சினிமாவுக்கு நடிக்க வந்த போது தர்மத்தின் தலைவன் படத்துக்கு முன்னாடி எனக்கு ஸ்கிரீன் டெஸ்ட் பண்ணினது பாக்யராஜ் சார்தான். இது நம்ம ஆளு படத்துக்காக ஸ்கிரீன் டெஸ்ட் பண்ணினாங்க. ஆனா அப்போ எனக்கு சுத்தமாக தமிழ் வராது.
ஆனா அவரோட படத்துல ரொம்பவும் நீளமாக 4 பக்கத்துக்கு டயலாக்ஸ் இருக்கும். சிங்கிள் ஷாட் இருக்கும். சுத்தமாக எனக்கு அப்போ தமிழ் தெரியாது. ஆனா அவர் என்னை ஸ்கிரீன் டெஸ்ட் பண்ணினார். அவரோட பாக்யா புத்தகத்திலேயும் என்னை பத்தி எழுதினார். இந்த பொண்ணுக்கு நல்ல எதிர்காலம் இருக்குதுன்னு அதுல சொல்லியிருந்தார். ஆனால் என்னால இது நம்ம ஆளு படத்துல நடிக்க முடியலே. ஆனா என்னை முதல் ஸ்கிரீன் டெஸ்ட் பண்ணினது அவர்தான் என்று நடிகை குஷ்பு அதில் கூறியிருக்கிறார்.





