தமிழ் சினிமாவில் பாடல் ஆசிரியராக பல ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதியவர் கவிஞர் வைரமுத்து. இதுவரை 6 முறை சிறந்த பாடல் ஆசிரியருக்கான மத்திய அரசின் தேசிய விருது பெற்றவர். வைகறை மேகங்கள் துவங்கி கள்ளிக் காட்டு இதிகாசம் கருவாச்சி காவியம் 3ம் உலகப்போர் என வள்ளுவன் மறை வைரமுத்து உரை என பல நூல்களை எழுதியவர்.
இந்தியாவில் இலக்கியத்தில் மிக உயரிய விருதுகளின் ஒன்றாக கருதப்படும் ஞானபீடம் விருது பெற்றவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் திமுக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு நேற்று வந்த கவிஞர் வைரமுத்து மரியாதை செலுத்தினார்.
அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய கவிஞர் வைரமுத்து கூறியதாவது, தேசப் பாடலுக்கும் தேசிய கீதத்திற்கும் முன்னுரிமை கொடுக்கிறீர்கள். தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முன்னுரிமை கொடுத்தால் என்ன என்ற கேள்வியை கேட்டு இந்தியா கூட்டணி 21 எம்பிக்கள் கவர்னருக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து எம்பி களுக்கும் ஒத்த கருத்து தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் முதலில் பாட வேண்டும் என்பதுதான். இந்த தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை தமிழ்நாட்டிற்கு அர்ப்பணித்தவர் கருணாநிதி. அவர்தான் மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய பாடலை எம்எஸ் விஸ்வநாதன் மூலம் இசையமைத்து நாட்டுக்கு காணிக்கை செய்தார்.
அந்த மூலப் பாடலில் சில வரிகள் வடநாட்டு மக்கள் சமஸ்கிருதம் பேசும் மக்கள் ஆரிய பண்பாட்டு காக்கிறவர்களை காயப்படுத்தும் என்று கருதிய கலைஞர் அந்த வரிகளை நீக்கினார். தமிழை வாழ்த்தும் பாட்டாக தமிழ் தாய் வாழ்த்து நாட்டுக்கு காணிக்கை ஆக்கினார்.
உங்கள் மனம் புண்படக் கூடாது என சில வரிகளை எடுத்தாரே கலைஞர்? எங்கள் மனம் புண்படுமாறு ஏன் அந்த வாழ்த்து பாடலை மூன்றாம் இடத்துக்கு தள்ளுகிறீர்கள் என்பதே தமிழர்களின் கேள்வி. எனவே மத்திய அரசு அந்தந்த மாநிலங்களில் மாநில பாடலுக்கு முன்னுரிமை தர வேண்டும். மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தில் அனைவரும் ஊரணியில் இணைவது அவசியம் என்று கவிஞர் வைரமுத்து அப்போது கூறியிருக்கிறார்.





