இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு நடித்து வரும் வாரணாசி படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் மாதம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகுபலி ஆர்ஆர்ஆர் படங்களைத் தொடர்ந்து இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் வாரணாசி படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
பாகுபலி படம் 2 பாகங்களாக வந்து மாபெரும் வெற்றி பெறும் வரை இந்திய சினிமாவில் 2 பாகங்களாக படங்களை உருவாக்கும் திட்டமே இருக்கவில்லை. சில படங்கள் 2ம் பாகம் 3ம் பாகம் என வெளிவந்த போதிலும் அது வெவ்வேறான கதைக்களங்களின் உருவான படங்களே தவிர ஒரே கதையின் தொடர்ச்சியாக இருக்கவில்லை.
ஆனால் பாகுபலிக்கு பிறகுதான் 2ம் பாகம் கொண்ட ஒரே கதைக்களம் படங்கள் அதிகளவில் தென்னிந்திய சினிமாவில் வெளியாகின்றன. இந்த நிலையில் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் வாரணாசி படத்தின் கதைக்களம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி வாரணாசி படத்தின் கதை இதுதான்.
உலகளாவிய அளவில் நடக்கும் ஒரு அதிநவீன ஹைடெக் கதைக்களம். 2027ம் ஆண்டில் சாம்பவி என்ற பிரமாண்ட விண்கல் புனித நகரமான வாரணாசி மீது நேரடியாக மோதும் அபாயம் ஏற்படுகிறது. இது உலகத்திற்கு ஒரு பெரிய அச்சுறுத்தலை உருவாக்குகிறது. தொல்பொருள் ஆராய்ச்சியாளரும் சாகச பயணியுமான ருத்ரா, பழமையான ஒரு விண்வெளி அரிய பொருளை கண்டெடுப்பதற்காக உலகம் முழுவதும் பயணம் மேற்கொள்ளும் ஒரு ஆபத்தான பணிக்கு தேர்வு செய்யப்படுகிறார்.
அவருடன் துணிச்சலான வரலாற்று ஆய்வாளரும் சிறந்த துப்பாக்கி சுடும் வீரருமான மந்தாகினியும் இணைகிறார். இவர்களது தேடல் ஆப்பிரிக்காவின் காடுகள் அண்டார்டிகாவின் பனி பிரதேசங்கள் மற்றும் ஐரோப்பியாவின் பல்வேறு நிலப்பரப்புகள் வழியே விரைந்து செல்லும் ஒரு அதிநவீன அறிவியல் புனைவு கதை திரில்லராக மாறுகிறது. இவர்களை தொழில்நுட்பத்தில் வல்லமை படைத்த வில்லன் கும்பன் துரத்துகிறான்.
எதிர்காலத்தில் வரவிருக்கும் இந்த பேரழிவை தடுப்பதற்கான சாவி வாரணாசியின் புராண வரலாற்றுக்குள் மறைந்துள்ளது. இதுதான் ராஜமவுலி இயக்கத்தில் உருவான வாரணாசி படத்தின் கதை என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இதில் ருத்ரா கேரக்டரில் மகேஷ்பாபுவும் மந்தாகினி கேரக்டரில் படத்தின் நாயகி தீபிகா படுகோனேவும் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.





