தமிழ் சினிமா ரசிகர்களால் இசைஞானி என்று கொண்டாடப்படுபவர் இளையராஜா. கடந்த 50 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இசை சக்ரவர்த்தியாக கோலோச்சி வரும் இளையராஜா முதன்முறையாக இசையமைப்பாளராக அறிமுகமான படம் அன்னக்கிளி. இந்த படம் தான் அவரது இசை பயணத்தின் முதல் படிக்கட்டாக அமைந்தது.
இன்று இசை உலகமே போற்றும் ஒரு இசை ராஜாவாக அவர் 84 வயதிலும் பிஸியாக திரைப்படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறார். இளையராஜாவை தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தியவர் பஞ்சு அருணாச்சலம். அவர்தான் அன்னக்கிளி என்ற படத்தை தயாரித்து இளையராஜாவை இசையமைக்க வைத்து அவரை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார்.
அதனால் எப்போதுமே இளையராஜா அவரது விசுவாசியாக நன்றிக்கடன் பட்டவராக இருந்திருக்கிறார். அவர் சொல்லும் கருத்துக்களை முழுமையாக ஏற்றுக் கொள்வார். ஆனால் பஞ்சு அருணாசலம் இயக்குனர் கனவோடு தான் சினிமாவுக்குள் வந்தார். வந்த புதிதில் மணமகளே வா என்ற படத்தையும் அவர் டைரக்ட் செய்தார். ஆனால் அதன் பிறகு அவர் தயாரிப்பாளராகி விட்டார்.
ஆனாலும் அவருக்குள் அந்த டைரக்டர் ஆசை இருந்து கொண்டே இருந்தது. இதை அறிந்து கொண்ட இளையராஜா, முதலாளி நீங்கள் படம் டைரக்ட் செய்யுங்கள். அதை நானே தயாரித்து மியூசிக்கும் போட்டு தருகிறேன். நடிகர் ராமராஜன் தேதியும் வாங்கித் தருகிறேன். கதையை மட்டும் தயார் செய்யுங்கள் என்று கூறினார். அப்படி உருவான ஒரு படம்தான் புதுப்பாட்டு.
ஏற்கனவே பாவலர் கிரியேஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தாலும் இந்த படத்திற்காக இளையராஜா கிரியேஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை இளையராஜா தொடங்கி புதுப்பாட்டு படத்தை தயாரித்தார். இந்த படத்தில் ராமராஜன் வைதேகி சுமாரங்கநாத் ராஜீவ் லிவிங்ஸ்டன் கவுண்டமணி செந்தில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு 10 பாடல்கள் இசையமைத்து கொடுத்தார் இளையராஜா.
ஆனால் இந்தப் படத்தின் பாடல்கள் ஹிட் ஆன அளவுக்கு படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. எனினும் தன்னை இசையமைப்பாளராக சினிமாவில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் பஞ்ச அருணாசலத்தின் விருப்பத்தை நிறைவேற்ற அவரை டைரக்டர் ஆக்கி அழகு பார்த்தவர் இசைஞானி இளையராஜா என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த படத்தை அவரே சொந்தமாக தயாரித்ததும் கவனிக்கத்தக்கது.





