இயக்குனர் கே பாக்யராஜிடம் உதவி இயக்குனராக இருந்தவர் பார்த்திபன். தன்னுடைய தாவணிக்கனவுகள் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் இணைந்து பார்த்திபனை நடிக்க வைத்தவர் கே பாக்யராஜ் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு புதிய பாதை படம் மூலம் இயக்குனராகி மாறி ஹீரோவாகவும் பார்த்திபன் நடித்தார்.
எதையுமே வித்யாசமான கோணத்தில் செய்பவர் நடிகர் பார்த்திபன். அவர் இயக்கும் படங்களில் மட்டுமின்றி அவர் செய்யும் விஷயங்களிலும் அது எதிரொலிக்கும். அவர் எழுதிய ஒரு கவிதை தொகுப்புக்கு கிறுக்கல்கள் என தலைப்பு வைத்திருந்தார். இப்படி பல விஷயங்கள் அவரிடம் வித்யாசமான கோணத்தில் காணப்படும்.
அதே போல் மேடைகளில் பேசும்போது வார்த்தைகளில் விளையாடி பார்வையாளர்களை அசத்தி விடுவார். இயக்குனர் நடிகர் தயாரிப்பாளர் கவிஞர் என பன்முக தன்மை கொண்ட பார்த்திபன், சமீபகாலமாக அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். குந்தவையை கொஞ்சம் வீட்டிலேயே குந்த வைக்கலாம் என்று அவர் நடிகை திரிஷா குறித்து பேசியது சமீபத்தில் பெரிய சர்ச்சையானது.
இந்நிலையில் சமீபத்தில் இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் ஒரு நேர்காணலில் பங்கேற்றார். அப்போது அவர் கூறுகையில், உதயநிதி ஸ்டாலின் பேச்சில் நிறைய புத்திசாலித்தனம் இருக்கிறது. நீங்கள் உங்கள் தாத்தா மாதிரி அறிவு மிகுந்த விஷயத்தை செய்கிறீர்கள். அப்படியே கொஞ்சம் அதில் எம்ஜிஆரையும் சேர்த்தால் கடைசி வரை நீங்கள் தான் முதலமைச்சர் என்று ஒருமுறை நான் அவரிடம் நேரில் சொன்னேன்.
அதாவது அவருக்கு இருக்கும் அறிவுடன் கொஞ்சம் மனிதாபிமானம் மக்கள் பசி இது அனைத்தையும் பார்க்கிற மாதிரி இருந்தால் நீங்கள் தான் சிஎம் என்று சொன்னேன் என்று அந்த நேர்காணலில் நடிகர் பார்த்திபன் கூறியிருந்தார். அவரது இந்த கருத்து ஒரு தரப்பினர் மத்தியில் விமர்சனத்தை சந்தித்தது.
இந்நிலையில் திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், நடிகர் பார்த்திபன் அந்த நேர்காணலில் பேசிய விஷயத்தை குறிப்பிட்டு, தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் அவரை விமர்சித்துள்ளார். அதில் அரசவை ராஜகுருவாக இவரை நியமித்தால் இந்தியா வல்லரசாகும். ஆவண செய்யுமா அரசு? என்று கேள்வி எழுப்பி பார்த்திபனை அவர் கலாய்த்து இருக்கிறார். அவரது இந்த டிவீட் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகியுள்ளது.





