தமிழ் சினிமாவில் கடந்த 1992ம் ஆண்டில் செம்பருத்தி படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ரோஜா. அவரை தமிழில் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் ஆர்கே செல்வமணி. அதன்பிறகு அவர் இயக்கிய பல படங்களில் நடித்த ரோஜா ஒரு கட்டத்தில் அவரையே காதலித்து திருமணமும் செய்துக்கொண்டார்.
சமீபகாலமாக படங்கள் டைரக்ட் செய்வதில் ஆர்வம் காட்டாத ஆர்கே செல்வமணி, பெப்சி திரைப்பட அமைப்பின் தலைவராக இருந்து வருகிறார். பெப்சி சங்கத்தின் தலைவராக அவர் 5வது முறையாக சமீபத்தில் தேர்வானது குறிப்பிடத்தக்கது. செல்வமணி – ரோஜா தம்பதிக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை ரோஜா கூறியதாவது, செல்வமணி பெரிய டைரக்டர் என்றாலும் ஆரம்பத்தில் அது எனக்கு தோணாது. ஆனால் அவர் பெயர் ஸ்கீரினில் வரும்போது ரசிகர்கள் கைதட்டி விசிலடித்து ஆரவாரம் செய்யும் போது, பெரிய டைரக்டர்தான் போல என்று நான் அப்போது நினைத்துக்கொள்வேன்.
நான் அவரை காதலித்த போது எனக்கு வயது 17 தான். இரவு பகல் என எந்நேரமும் ஷூட்டிங் ஷூட்டிங் என்று பாடாய் படுத்தி விடுவார். ஒரே டென்சனாக இருக்கும். அப்போது தமிழும் எனக்கு தெரியாது. ஆனால் அவரை காதலித்த நேரம் என்பதால் அந்த மனநிலையில் அந்த பிரச்னைகள் எனக்கு பெரிதாக தெரியவில்லை.
எப்போது நேரம் கிடைக்கும், அவருடன் ஜாலியாக ஊர் சுற்றலாம். சினிமா பார்க் என்று போலாம் என்றுதான் யோசிப்பேன். எப்போதாவது நாங்கள் இருவரும் செல்லும் போது ரசிகர்கள் சூழ்ந்துக்கொண்டால் அவரை பார்த்து இந்த கேள்வியை கேட்டுக்கொண்டே இருப்பார்கள். அவர் பார்ப்பதற்கு சின்ன பையன் போல ஒல்லியாக இருப்பார். ஆனால் அவரது படங்கள் பிரமாண்டமாக ஆங்கில படங்களை போல இருக்கும்.
அதனால் இந்த படம் முழுவதும் நீங்களே எடுத்தீங்களா, எல்லா காட்சியும் நீங்களே எடுத்தீங்களா, அந்த ஸ்டண்ட் காட்சி எல்லாம் எடுத்தீங்களா என்று சந்தேகமாகவே சிலர் கேட்பார்கள். அது அப்போது கஷ்டமாக கூட எங்களுக்கு இருக்கும். நான் சின்ன பையன் மாதிரி தெரிவதால் அவர்கள் என்னுடைய படத்தில் வரும் அப்படிப்பட்ட பிரமாண்ட காட்சிகளை பார்த்து பிரமித்து போய், அப்படி கேட்கிறார்கள் என்று செல்வா என்னை சமாதானம் செய்வார் என்று நடிகை ரோஜா அப்போது கூறினார்.





