இப்போது டிஜிட்டல் ரைட்ஸ் எனப்படும் ஓடிடி தளங்களில் புதிய படங்கள் வெளியீடு காரணமாக தயாரிப்பாளர்களுக்கு கணிசமான வருவாய் கிடைத்து வருகிறது. ஆனால் ஆரம்பத்தில் வாரி வாரி வழங்கிய ஓடிடி நிறுவனங்களும் இப்போது டிஜிட்டல் உரிமத்துக்கான விலையை கணிசமாக குறைத்து வருகின்றன. படங்கள் தியேட்டரில் பெரிய அளவில் ஓடினால் மட்டுமே விலையை கூட்டி தருவதாக கண்டிசன்ஸ் அப்ளை வைத்து தான் வாங்குகிறது.
இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் ஒரு புதிய படம் தியேட்டரில் ரிலீஸ் ஆனால் சரியாக 4 வாரங்கள் கழித்து 28 நாட்களுக்கு பிறகு அந்த படம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்படுவது வழக்கமாக உள்ளது. இதற்கு தியேட்டர் உரிமையாளர்களும் வினியோகஸ்தர்களும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இதை 8 வாரங்களாக உயர்த்த வேண்டும் என்று கூறுகின்றனர்.
அதாவது ஒரு புதிய படம் திரைக்கு வந்து 4 வாரங்களில் ஓடிடிக்கு வந்து விடுவதால் யாரும் தியேட்டர்களுக்கு வராமல் ஓடிடியில் பார்த்துக் கொள்ளலாம் என விட்டுவிடுகின்றனர். இதனால் தியேட்டர்களில் கணிசமான கூட்டம் இல்லாமல் நஷ்டம் ஏற்படுவதாக அவர்கள் தரப்பில் கூறுகின்றனர். அதனால் 8 வாரங்கள் வரை காத்திருந்து பிறகு ஓடிடியில் படத்தை ரிலீஸ் செய்ய கூறுகின்றனர்.
அதே நேரத்தில் 4 வாரங்களுக்கு பிறகு ஓடிடியில் ரசிகர்கள் படம் பார்ப்பதாக இருந்தால் மட்டுமே அதிக விலை கொடுத்து படத்தை வாங்க ஓடிடி நிறுவனங்கள் முன்வருகின்றன. ஏனெனில் தியேட்டரில் பார்க்காத ரசிகர்கள் அதிகமாக இருந்தால் தான் ஓடிடியில் அந்த படத்துக்கு பெரிய வரவேற்பும் ரசிகர்களின் ஆதரவும் கிடைக்கும் என்ற நிலையில் ஓடிடி நிறுவனங்கள் உள்ளன.
இந்த சூழ்நிலையில் 8 வாரங்களுக்கு பிறகுதான் ஓடிடி ரிலீஸ் செய்யப்படும் என உறுதிமொழி கடிதம் கொடுத்தால் தான் படத்தை வெளியிடுவோம் என்று வினியோகஸ்தர்களும் தியேட்டர் உரிமையாளர்களும் நெருக்கடி தந்துள்ளனர். இதையடுத்து திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், நடப்பு தயாரிப்பாளர் சங்கம் நிர்வாகிகள் கூட்டத்தில் எடுத்த முடிவின் படி, வருகிற செப்டம்பர் 1ம் தேதி முதல் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை என்று அதிரடியாக அறிவித்துள்ளனர்.
மேலும் படப்பிடிப்பு போஸ்ட் புரடக்சன்ஸ் பணிகள் எதுவும் நடக்காது என்றும் தெரிவித்துள்ளனர். இது ஸ்டிரைக் போன்ற நெருக்கடியை கோலிவுட்டில் ஏற்பட்டுள்ளது. இதில் 2 தரப்புமே அவரவர் சாதகங்களை யோசிக்கும் நிலையில் இந்த விவகாரம் முன்னாள் நடிகர் இன்றைய முதல்வர் விஜயிடம் விரைவில் பஞ்சாயத்துக்கு போக உள்ளது. அவர் தயாரிப்பாளர் சங்கம் பக்கம் நிற்பாரா, அல்லது தியேட்டர் உரிமையாளர் வினியோகஸ்தர் பக்கம் நிற்பாரா, இந்த சிக்கலுக்கு என்ன முடிவு கிடைக்கப் போகிறது என்று கோலிவுட் ஆர்வமாக எதிர்பார்த்துள்ளது.





