தமிழக வெற்றிக் கழகம் கடந்த சட்டசபை தேர்தலின் போது திமுக மற்றும் அதிமுக கட்சிகளை போலவே கவர்ச்சிக்கரமான சில இலவச திட்டங்களை அறிவித்தது. அதில் மிக முக்கியமாக குடும்ப பெண்களுக்கான 3 முக்கிய திட்டங்களை அறிவித்தது. அதன்படி தமிழகம் முழுவதும் பெண்களுக்கு இலவச பஸ் பயணம், ஆண்டுக்கு 6 இலவச கேஸ் சிலிண்டர் மற்றும் மகளிர் உரிமம் தொகை ரூ. 2500 என உயர்த்தி தருவதாக வாக்குறுதியளித்தது.
தமிழக மக்கள் குறிப்பாக பெண்கள் தவெக கட்சியின் கவர்ச்சியான தேர்தல் வாக்குறுதிகளை நம்பி வாக்களித்து அந்த கட்சியை 108 இடங்களில் வெற்றி பெறச் செய்தனர். ஆனால் இன்று தமிழக சட்டசபையில் அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
ஆனால் இதற்கு பயனாளியின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சமாக மட்டுமே இருக்க வேண்டும். மேலும் கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்து வாங்கிய பிறகுதான் அந்த பயனாளியின் வங்கி கணக்கில் அந்த தொகை வரவு வைக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார். ஆனால் தேர்தல் வாக்குறுதியில் அனைத்து குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர் என்றுதான் அறிவித்தார்.
இப்போது 6 சிலிண்டர் என்பதை 3 சிலிண்டர்களாக குறைத்தது மட்டுமின்றி ஆண்டு குடும்ப வருமானம் 2.5 லட்சம் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதித்துள்ளார். அப்படி என்றால் ஒரு குடும்பத்தின் மொத்த மாத வருமானம் 20,833 ரூபாயாக மட்டுமே இருக்க வேண்டும். அதுவும் தனிநபர் வருமானம் அல்ல. குடும்பத்தின் ஒட்டுமொத்த வருமானமே இதுதான். அப்படி என்றால் ஒரு நாள் வருமானம் 700 ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.
அப்பா அம்மா 2 பிள்ளைகள் என 4 பேர் கொண்ட குடும்பத்தில் ஒரு நாள் வருமானம் 700 ரூபாய் என்றால் அவர்களது வீட்டு வாடகை தினசரி 3 வேளை உணவு கல்வி மருத்துவம் போக்குவரத்து மின்கட்டணம் குடும்ப செலவுகள் எல்லாமே இந்த 700 ரூபாய்க்குள் 4 பேரும் பகிர்ந்துக்கொள்ள வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே இந்த திட்டத்தில் பயன் பெற தகுதியானவர்களாக இருப்பார்கள்.
இன்றைய காலகட்டத்தில் 4 பேர் 3 வேளையும் உணவு சாப்பிடவே இந்த பணம் போதாத ஒரு சூழலில் விற்கிற விலைவாசியில் மாதம் 20 ஆயிரம் ரூபாய் வருமானத்தை வைத்து வாழ்க்கை நடத்துவது என்பதே நடக்காத காரியம். இதை நிபந்தனையாக வைத்து கேஸ் சிலிண்டர் இலவசமாக தருவதாக தவெக அரசு அறிவித்திருப்பது வேடிக்கை விசித்திரம் மட்டுமல்ல, தவெகவை நம்பி ஓட்டு போட்ட ஒட்டுமொத்த மக்களுக்கும் காதில் ஊதிய சங்கு என்பது தெளிவாகிறது என்று கடும் விமர்சனம் எழுந்துள்ளது.





