எப்போதுமே சொந்த சரக்கு இல்லாமல் அடுத்தவர்களின் படைப்புகளை பட்டி டிங்கரிங் பார்த்து தமிழ் சினிமாவில் டைட்டிலை மாற்றி தந்து விடுகின்றனர். இப்படி பல தமிழ் படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் பெரிய வெற்றியை பெற்றிருக்கின்றன. மற்ற மொழி படங்களை பார்க்க ஆர்வம் காட்டாத ரசிகர்களால் தான் இயக்குனர்கள் தப்பித்து கொள்கின்றனர்.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் உலக சினிமாக்களை ரசிக்கும் ரசிகர் கூட்டம் அதிகரித்து வருகிறது. அதனால் எந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானாலும் டீசர் வெளியானாலும் இது அந்த மலையாள படத்தின் ஹாலிவுட் படத்தின் காப்பிதானே என்று உடனடியாக கண்டுபிடித்து வெளிச்சத்துக்கு கொண்டு வந்து விடுகின்றனர்.
அப்படி ஒரு இந்தி படத்தை காப்பியடித்து தமிழில் 2 படங்கள் வெளியாகி இருக்கின்றன. கடந்த 1962ம் ஆண்டில் இந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் புரபசர். இயக்குனர் லேக் தாண்டன் இயக்கிய இந்த படத்தில் ஷம்மி கபூர் கல்பனா மோகன், லலிதா பவர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்த படத்தின் கதைப்படி ஒரு இளைஞன் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒரு பணக்கார வீட்டுக்குள் வயதான தோற்றத்தில் செல்கிறான். அங்குள்ள வயதில் மூத்த பெண் அவரை காதலிக்கிறார். அதே வீட்டில் அவன் இளமையான தோற்றத்தில் டிரைவராக பணியாற்ற அந்த குடும்பத்தின் இளம் வாரிசும் அவரை காதலிக்கிறார். இப்படியான ஆள் மாறாட்ட காமெடி கதையில் புரபசர் படம் உருவாகி உள்ளது.
இந்த படம் தான் கடந்த 1968ம் ஆண்டில் நடிகர் ரவிச்சந்திரன் நடிப்பில் நாலும் தெரிந்தவன் என்ற பெயரில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் காஞ்சனா நாகேஷ் அஞ்சலிதேவி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தை இயக்குனர் ஜம்பு இயக்கியிருந்தார். இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது. இதே கதையை 28 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குனர் பி வாசு, நடிகன் என்ற பெயரில் டைரக்ட் செய்தார். இதில் சத்யராஜ் குஷ்பூ மனோரமா கவுண்டமணி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இந்த மூன்று படங்களுமே மிகப்பெரிய வெற்றி பெற்றது. இது தவிர இந்த கதை தெலுங்கில் பாலே மஸ்தரு என்ற தலைப்பில் 1969ம் ஆண்டும் பென்னிட்டி அல்லுடு என்ற பெயரில் 1991ம் ஆண்டும் வெளிவந்தது. இதே படம் கோபி கிருஷ்ணா என்ற பெயரில் கன்னடத்திலும் ரீமேக் செய்யப்பட்டது. இப்படி ஒரு கதையை தமிழ் தெலுங்கு கன்னடம் என மாற்றி மாற்றி எடுத்து கல்லா கட்டியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.





