புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் மிக தீவிரமான ரசிகர் மற்றும் விசுவாசியாக இருந்தவர் இயக்குனர் மற்றும் நடிகர் கே பாக்யராஜ். அதே போல் எம்ஜிஆரும் கே பாக்யராஜ் மீது தனிப்பட்ட அன்பும் வைத்திருந்தார். அதனால்தான் அவர் தனது கலையுலக வாரிசு என்று கே பாக்யராஜை அறிவித்தார்.
மேலும் அமெரிக்காவில் எம்ஜிஆர் சிகிச்சையில் இருந்த போது நேரில் வந்து பார்க்க அனுமதிக்கப்பட்ட ஒருவர் கே பாக்யராஜ் மட்டும்தான். எப்போதுமே தனது திரைப்படங்களில் எம்ஜிஆர் சம்பந்தப்பட்ட புகைப்படங்களை காட்சிகளை வைத்து தனது அன்பை மரியாதையை வெளிப்படுத்துவது கே பாக்யராஜின் வழக்கமாக கடைசி வரை இருந்தது.
இதில் எம்ஜிஆர் நடித்து 5000 அடி எடுக்கப்பட்ட ஒரு படத்தை ரகசிய போலீஸ் 100 என்ற படமாக உருவாக்கியவர் கே பாக்யராஜ். அதில் 2 வேடங்களில் பாக்யராஜ் நடித்திருந்தார். கௌதமி சில்க் ஸ்மிதா எம்என் நம்பியார் விஜயகுமார் உள்ளிட்டோரும் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர்.
இந்த படம் குறித்து ஒரு நேர்காணலில் இயக்குனர் கே பாக்யராஜ் கூறியதாவது, ஸ்ரீதர் இயக்கத்தில் எம்ஜிஆர் நடித்த படம் அண்ணா நீ என் தெய்வம். 5 ஆயிரம் அடி எடுத்த நிலையில் எம்ஜிஆர் முதல்வரானதால் அந்த படம் அப்படியே நின்று விட்டது. அப்படியே ஏழெட்டு வருஷம் ஆயிடுச்சு. அந்த படத்தின் தயாரிப்பாளர் 12 லட்சம் ரூபாய் வரைக்கும் செலவு செஞ்சு எடுத்தது இப்படி ஆயிடுச்சு.
இதை வெச்சு ஏதாவது பண்ண முடியுமான்னு பார்க்கிற எல்லாருகிட்டேயும் புலம்பியிருக்கிறார். இது என் காதுக்கும் வந்தது. எம்ஜிஆரை வெச்சு படம் எடுத்த எல்லோரும் நல்லா இருக்கும்போது இவர் மட்டும் இப்படி சொல்லிட்டு இருக்காரேன்னு எனக்கு தோணுச்சு. அவரை கூப்பிட்டு வெச்சு நான் இதுக்கு ஒரு கதை பண்றேன். நீங்க ஒரு ஆக்சன் ஹீரோவை வெச்சு எடுங்க. படம் ஹிட் ஆயிடும்ன்னு சொன்னேன். அவர் என்னையே நடிக்க சொல்லிட்டார்.
அந்த படத்துக்கு ஒரு பக்க விளம்பரம் போட்டாங்க. அதை எம்ஜிஆரிடம் கொண்டு போய் காட்டினேன். அதுல 2 பாக்யராஜ் ஸ்டில் இருந்தது. அதை பார்த்துட்டு இந்த படத்துல என் தங்கச்சியை நம்பியார் கெடுத்துட்டு போயிடுவார். அவரோட என் தங்கச்சியை சேர்த்து வைக்க பாடுபடுவேன். அந்த குழந்தையை வெச்சுட்டு பாடுவேன். அதுல ஒரு குழந்தைதானே? எப்படி 2 பேர் இதுல வர முடியும்? என்று கேட்டார். எப்படியோ கதையை சொல்லி சமாளிச்சிட்டேன். ஆனா சிஎம் ஆகியும் பல ஆண்டுகளாகியும் அவர் அந்த கதையை அவ்வளவு நுணுக்கமா கேட்டப்போது சினிமாவை எந்தளவுக்கு நேசிக்கிறார் என்பதை புரிஞ்சுக்கிட்டேன் என்று கே பாக்யராஜ் அதில் கூறியிருக்கிறார்.





