சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் டிடி பாலச்சந்திரன் இயக்கிய படம் லெனின் பாண்டியன். இந்த படத்தில் இசையமைப்பாளர் கங்கை அமரன் நடிகை ரோஜா மற்றும் நடிகர் திலகம் சிவாஜி பேரன் தர்ஷன் கணேசன் ஆடுகளம் நரேன் யுகேந்திரன் போஸ் வெங்கட் ஜார்ஜ் மரியன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.இளையராஜா இசையமைத்துள்ளார். வரும் 25ம் தேதி லெனின் பாண்டியன் படம் ரிலீஸ் ஆகிறது.
சென்னையில் நடந்த லெனின் பாண்டியன் பட விழாவில் நடிகை ரோஜா பேசியதாவது, எந்த ஒரு காட்பாதரின் பின்புலமும் இல்லாமல் சினிமா மற்றும் அரசியல் என இரண்டு துறைகளிலும் பயணிக்க முடிந்ததற்கு கடவுளுக்கு நன்றி. என்னுடைய முதல் படத்துக்கு இசையமைத்த இளையராஜா சார் என்னுடைய ரி என்ட்ரி படத்துக்கும் இசையமைத்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான விஷயம். நான் அவருடைய மிகப்பெரிய ரசிகை.
சிவாஜி கணேசன் சார் பிரபு சார் ஆகியோருடன் நடித்த நான் இப்போது 3வது தலைமுறையாக தர்ஷன் கணேசன் உடன் இந்த படத்தில் நடித்திருக்கிறேன். அவர்களுடன் பணியாற்றுவதில் இன்னொரு சிறப்பும் இருக்கிறது. படப்பிடிப்பு தொடங்கியது முதல் முடியும் வரை வீட்டு சாப்பாடு கிடைக்கும்.
இந்த படத்தில் கங்கை அமரன் சாருடன் இணைந்து நடித்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. பல படங்களுக்கு இசையமைத்து இயக்கியும் இருக்கும் அவர் இந்த படத்தில் அனுபவம் வாய்ந்த நடிகரைப் போல மிக இயல்பாக நடித்திருக்கிறார். லெனின் பாண்டியன் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான படம்.
பாரதிராஜா சார் படங்களை பார்த்தபோது நமக்குள் ஏற்படும் உணர்வைப் போல இந்த படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும் போது ரசிகர்கள் கதையுடன் உணர்வு பூர்வமாக இணைந்து இருப்பார்கள். தர்ஷன் கணேசன் பற்றி குறிப்பாக சொல்ல வேண்டும். சிவாஜி சார் குடும்பத்தில் இருந்து வந்தவர் என்ற எந்தவித கர்வமும் இல்லாமல் முதல் படத்தில் நடிக்கும் ஒரு சாதாரண நடிகரைப் போல மிகவும் எளிமையாக பழகினார்.
சக நடிகர்கள் நடிப்பதை பார்த்து அதற்கேற்ப ரியாக்ட் செய்வது அனைவருடனும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது வெயிலில் படக் குழுவினருடன் இருப்பது என அவர் மிகவும் இயல்பாக இருந்தார். முன்பெல்லாம் படப்பிடிப்பு தளத்தில் ஒரு குடும்பம் போன்ற சூழல் இருக்கும். தற்போது அது குறைந்து வரும் நிலையில் லெனின் பாண்டியன் படத்தின் மீண்டும் அந்த குடும்ப உணர்வை அனுபவித்தேன் என்று நடிகை ரோஜா அந்த விழாவில் பேசியிருக்கிறார்.





