இயக்குனர் ஷங்கர் இயக்கிய 15 படங்களில் 13 படங்கள் பெரிய வெற்றிப் படங்களாக இருந்தன. கடைசியாக அவர் இயக்கிய இந்தியன் 2 கேம் சேஞ்சர் என்ற 2 படங்கள் மட்டுமே சரியாக போகவில்லை. ஆனால் ஜெண்டில்மேன் துவங்கி அவர் இயக்கிய மற்ற எல்லா படங்களுமே ரசிகா்களிடம் பலத்த ஆதரவும் வரவேற்பும் பெற்ற படங்களாக தான் இருந்தன.
அதிலும் குறிப்பாக நடிகர் அர்ஜூன் ஹீரோவாக நடித்த முதல்வன் படம் இயக்குனர் ஷங்கருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இந்த படத்தில் டிவி கேமராமேன் அர்ஜூன் ஒரு கட்டத்தில் தலைமை செய்தியாளராக மாறுகிறார். பிறகு முதல்வர் ரகுவரனை நேர்காணல் செய்யும் போது அவரது ஆட்சியின் அவலங்களை புட்டு புட்டு வைத்து கேள்வி கேட்கிறார்.
அப்போது அர்ஜூனை அடக்குவதற்காக நீ ஒருநாள் முதல்வராக இருந்து பார், என்னுடைய சிரமங்கள், முதல்வர் பதவியில் உள்ள சிக்கல்கள் தெரியும் என்று சவால் விட அர்ஜூனும் அதை ஏற்றுக்கொள்கிறார். முடிவில் தமிழ்நாட்டின் நிரந்தர முதல்வராக அர்ஜூன் மாறுவதுதான் இந்த முதல்வன் படத்தின் கதை.
முதலில் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க தேர்வானவர் நடிகர் ரஜினிகாந்த் தான். அவரிடம் தான் ஷங்கர் முதல்வன் கதையை பற்றி சொல்லியிருக்கிறார். ஆனால் அப்போது திமுக ஆட்சியில் முதல்வராக கருணாநிதி இருந்ததால், சிக்கல் வேண்டாம் என்று முதல்வன் கேரக்டரில் நடிக்க ரஜினிகாந்த் மறுத்து விட்டார்.
அடுத்து நடிகர் விஜயிடம் முதல்வன் படத்தில் நடிக்க கேட்டுள்ளார் இயக்குனர் ஷங்கர். இதை நேரடியாக விஜயின் அப்பா எஸ்ஏ சந்திரசேகரிடம் ஷங்கர் கேட்காமல், தனது உதவியாளர் மூலம் கேட்டிருக்கிறார். ஏனெனில் முதலில் எஸ்ஏசியிடம்தான் ஷங்கர் உதவியாளராக இருந்தார். அந்த கடுப்பில் எஸ்ஏசி மறுத்திருக்கிறார்.
மேலும் விஜய் வளர்ந்து வந்த அந்த காலகட்டத்தில் முதல்வன் கேரக்டரில் நடித்தால் மொத்த கேரியரும் முடிந்துவிடும் என்பதையும் புரிந்துக்கொண்டு எஸ்ஏசி அந்த படத்தில் விஜய் நடிக்க மாட்டார் என்று மறுத்துவிட்டார். அதன்பிறகு கமலிடம் முதல்வன் கதையை கொண்டு போயிருக்கிறார் ஷங்கர். ஆனால் அப்போது ஹேராம் உள்ளிட்ட சில படங்களில் பிஸியாக இருந்த கமல் கால்ஷீட் தர முடியாத நிலையில் கடைசியாக அர்ஜூன் அதில் கமிட் ஆகியிருக்கிறார்.





