சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் கடந்த 2023ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதைத் தொடர்ந்து தற்போது ஜெயிலர் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது.
இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா போதி என்ற கேரக்டரிலும் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு திலீப் என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். அவர்களது கேரக்டர் அறிமுக போஸ்டர்கள் ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது நடிகை வித்யா பாலனின் காந்தா புகைப்படம் வெளியாகியுள்ளது.
ஜெயிலர் 2 படத்தின் அறிமுக வீடியோவில் நீல நிற சேலையில் கையில் சிகரெட் பிடித்தபடி படிக்கட்டுகளில் வித்யாபாலன் இறங்கி வருகிறார். இங்கே வந்த பிறகு எங்கள் பேச்சைக் கேட்காமல் யாரும் வெளியேற முடியாது என்று ஒரு பஞ்ச் டயலாக்கும் அவர் பேசுகிறார். ஹீரோ ரஜினிக்கு எதிரான பவர்ஃபுல் வில்லி கதாபாத்திரமாக காந்தா இருக்கும் என்று தெரிகிறது.
மேலும் இந்த படத்தில் மிதுன் சக்கரவர்த்தி ரம்யா கிருஷ்ணன் யோகி பாபு விஜய் சேதுபதி ஹிருத்திக் ரோஷன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படம் வருகிற அக்டோபர் 15ம் தேதி ரிலீஸ் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. 2023ல் வெளியான ஜெயிலர் படம் ரூ. 600 கோடிக்கு மேல் வசூலை அள்ளிய நிலையில் இந்த படம் 1000 கோடி ரூபாய் வசூலை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 1980 90களில் வெளியான படங்களில் ரஜினி கமல் விஜயகாந்த் சத்யராஜ் பிரபு கார்த்திக் போன்ற ஹீரோக்கள் புகை பிடிப்பது போன்ற காட்சிகள் படம் முழுவதும் இருந்தன. அதைப் பார்த்து இளைஞர்கள் பலரும் புகைபிடிக்க ஆர்வம் காட்டினர். அதே நேரத்தில் எம்ஜிஆர் ராமராஜன் போன்ற நடிகர்கள் படங்களில் சிகரெட் புகைப்பது மதுபானம் அருந்தும் காட்சிகளில் நடிக்காமல் தவிர்த்து தங்களது ரசிகர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
சமீபகாலமாக பெண்கள் புகைப்பது போன்ற காட்சிகள் தமிழ் சினிமாவில் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் வெளியான டாக்ஸிக் படத்தில் நடிகை நயன்தாரா புகைப்பிடிப்பது போல் நடித்திருந்தார். டிசி படத்தில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி சிகரட் பிடிப்பது போன்ற காட்சி இருந்தது. இப்போது ஜெயிலர் 2 படத்தில் வித்யாபாலன் சிகரெட் பிடிக்கிறார். இன்றைய ஜென்ஸி கூட்டத்தில் பெண்களுக்கு நல்ல வழிகாட்டும் செயலா இது? என்று கடும் விமர்சனம் எழுந்துள்ளது.





