சென்னையில் ஜெயிலர் 2 படத்தின் சூப்பர் ஷோ என்ற பிரமோஷனல் நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளர் சன் குழுமம் தலைவர் கலாநிதி மாறன் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இசையமைப்பாளர் அனிருத் மற்றும் படத்தில் நடித்துள்ள நடிகர்கள் நடிகைகள் திரளாக பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெயிலர் 2 படத்தின் நாயகன் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது, வழக்கமாக நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தான் இசை வெளியீட்டு விழாவை நடத்துவோம். இந்த முறை ஒரு மாற்றத்திற்காக வேறு மாதிரி நடத்த திட்டமிட்டோம். ஆனாலும் ரசிகர்களை சந்திக்க முடியாதது எனக்கு மிகவும் வருத்தம் தான்.
ஜெயிலர் 2 படத்தை சீக்குவல் என்று சொல்ல மாட்டேன். சீக்குவல் என்றாலே சரக்கு கம்மி ஆகிடுச்சு கிரியேட்டிவிடி கம்மி ஆகிடுச்சு என்று சொல்வார்கள். இதே போல் தான் பாட்ஷா படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கலாம் என்று சொன்னார்கள். அதை நான் மறுத்துவிட்டேன். அதேபோல் பேட்ட படத்தின் இரண்டாம் பாகம் கதையை கார்த்திக் சுப்பராஜ் என்னிடம் சொன்னார்.
அதில் விஜய் சேதுபதியின் கேரக்டர் முக்கிய கதாபாத்திரமாக இடம்பெற்றது. அவர் இல்லாமல் அதிலும் எனக்கு அந்த உடன்பாடு வரவில்லை. ஜெயிலர் திரைப்படம் வெளியாகி படம் ஓடிடியில் வெளியான போது இன்னொரு முறை படத்தைப் பார்த்தேன். அப்போது நெல்சன் படத்தில் பல இடங்களில் இரண்டாம் பாகத்துக்கான ஹிண்ட் கொடுத்திருந்தார்.
இது ஒரு பெரிய நெட்வொர்க் என வருமன் கதாபாத்திரம் படத்தில் சொல்வார். ஜெயிலர் கதாபாத்திரத்தை நெல்சன் உருவாக்கி இருக்கும் விதமும் இரண்டாம் பாகம் எடுப்பதற்கு சரியாக இருந்தது. அதேபோல் இந்த படத்தில் நான் என்னுடைய வயதை ஒத்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். ஜெயிலர் 2 படம் பண்ணலாம் என்று நெல்சனிடம் கேட்டபோது அவர் அதை மறுத்துவிட்டார்.
ஆனால் ஒரு மாதத்திற்கு பிறகு எனக்கு போன் செய்து ஜெயிலர் 2 படம் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார். படத்தின் கதையை எழுத சில மாதங்கள் அவகாசம் கேட்டுவிட்டு பொறுமையாக கதையை எழுதிக் கொண்டு வந்தார். அப்படி உருவான ஜெயிலர் 2 படத்தை தான் நீங்கள் விரைவில் பார்க்கப் போகிறீர்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் அந்த நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.





