தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களை மொத்தமாக வாடகைக்கு வாங்கி அதனை வெளியிடுபவர் யார் என்றால் ராகவா லாரன்ஸ் ஆகத்தான் இருக்கும். ஆரம்பத்தில் நடனத்தில் கவனம் செலுத்தி வந்த அவர், படிப்படியாக உயர்ந்து நடன இயக்குனராக அவதாரம் எடுத்தார்.
பிறகு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பும் ராகவா லாரன்ஸிற்கு கிடைத்தது. பார்த்தாலே பரவசம், அற்புதம், ராஜாதி ராஜா, பாண்டி உள்ளிட்ட திரைப்படங்களில் அவர் கதாநாயகனாக நடித்தார். இது போக சிம்பு தேவன் இயக்கத்தில், ராகவா லாரன்ஸ் நடித்த இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதன் நடுவே இயக்குனராகவும் தன்னை மேம்படுத்திக் கொண்ட அவர், தெலுங்கில் நாகர்ஜுனாவை வைத்து டான் படத்தை இயக்கினார். இதன் பிறகு தமிழுக்கு வந்த லாரன்ஸ், முனி திரைப்படத்தை இயக்கி வெற்றி பெற்றார். வழக்கமான ஹாரர் திரைப்படமாக அது இருந்தாலும், நகைச்சுவை கலந்து சுவாரசியமான திரைக்கதையை அவர் கொடுத்ததால் படம் நின்று பேசியது.
இந்த ஃபார்முலாவை கையில் எடுத்த ராகவா லாரன்ஸ், காஞ்சனா படத்தின் மூன்று பாகங்களை அடுத்தடுத்து இயக்கினார். இதில் முதல் இரண்டு பாகங்கள், எதிர்பார்த்ததை விட வசூலில் சக்கை போடு போட்டது. பங்களாவில் வாழும் பேய், அதற்குப் பின்னால் இருக்கும் பிளாஷ்பேக், பிளாஷ்பேக்கை கேட்டு மனம் உருகும் ஹீரோ என ஒரே பிளாட்டில் கதைக்களம் இருந்தாலும், அதை எடுத்துச் சொல்லும் விதத்தில் கை தேர்ந்தவராக ராகவா லாரன்ஸ் இருந்தார்.
இதைத்தொடர்ந்து மொட்ட சிவா கெட்ட சிவா படத்தை இயக்கினார் ராகவா லாரன்ஸ். தன்னைத் தீவிர ரஜினி ரசிகராக காட்டிக் கொள்ளும் அவர், அந்தப் படத்தில் தன் பெயருக்கு முன்னால் மக்கள் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை இணைத்துக் கொண்டார். இதற்கு ரசிகர்கள் பலரும் அதிருப்தி தெரிவிக்க, தனக்கே தெரியாமல் அந்த பட்டத்தை படக்குழு போட்டுக் கொண்டதாக மழுப்பினார். இதனிடையே அவர் நடிப்பில் வெளியான ருத்ரன் திரைப்படமும் மண்ணை கவ்வியது.
இந்த நிலையில் தற்போது சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் டைட்டில் கார்டில், லாரன்ஸ் பெயர் நீக்கப்பட்டு வெறும் ராகவா மட்டுமே இருந்தது. இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில், ராகவா லாரன்ஸிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், ராகவா லாரன்ஸ் என்கிற பெயரை சுருக்கமாக போட்டுவிடலாம் என்று எனது தாய் கூறினார்கள். இதனால் ராகவா என்பதே வைத்துக் கொண்டேன். இதற்கு வேறு எந்த காரணமும் இல்லை என்று தெரிவித்தார். நடிகரின் இந்த விளக்கத்தை கேட்டு பலரும் ஆச்சரியமடைந்துள்ளனர்.





