தமிழ்நாட்டை மூன்று முறைக்கும் மேல் ஆட்சி செய்தவர் ஜெயலலிதா. எம்ஜிஆரை ரோல் மாடலாகக் கொண்டு அரசியலுக்குள் அடியெடுத்து வைத்த அவர் முதலில் வெண்ணிற ஆடை என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. ஜெயலலிதா அறிமுகமான அதே படத்தில்தான் நடிகை நிர்மலாவும் அறிமுகமானார். அதிலிருந்து அவர் வெண்ணிற ஆடை நிர்மலா என அழைக்கப்பட்டுவருகிறார்.
முதல் படத்தின் வெற்றிக்கு பிறகு நிர்மலாவுக்கும் பல பட வாய்ப்புகள் கிடைத்தன. அதன்படி அவர் எம்ஜிஅருடன் நடித்த இதயக்கனி, ரகசிய போலீஸ் 115 உள்ளிட்ட படங்கள் மெகா ஹிட்டடித்தன. எம்ஜிஆர் மட்டுமின்றி ஜெமினி கணேசன், சிவாஜி கணேசன் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்தும் பிரபலமடைந்தார். குறிப்பாக எம்ஜிஆரின் அரவணைப்புக்குரிய நடிகையாக மாறினார் நிர்மலா.அதிலும் எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் இடையில் முட்டிக்கொள்ள அவருக்கு போட்டியாக நிர்மலாவை எம்ஜிஆர் வளர்த்தார் என்ற பேச்சும் அப்போதைய சினிமா உலகில் பரபரப்பாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையி சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு ஒரு பேட்டியில் நிர்மலா, எம்ஜிஆர் குறித்து பல தகவல்களை பகிர்ந்திருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், ”நடிகர் எம்ஜிஆர் அதிமுக என்ற கட்சியை தொடங்கினார். அதன் பிறகு அவர் வெண்ணிற ஆடை நிர்மலாவை சகோதரியாக ஏற்றுக்கொண்டார். அந்த நேரத்தில் ஜெயலலிதாவுக்கும், எம்ஜிஆருக்கும் பிரச்னை வேறு ஏற்பட்டுவிட்டது.
இதன் காரணமாக நிர்மலாவுக்கு தனது கட்சியிலிருந்து எம்.எல்.சி பதவியையும் வாங்கிக்கொடுத்தார் எம்ஜிஆர். ஆனால் சைதை கோபால் சாமி என்பவர் நிர்மலா மீது ஒரு வழக்கு தொடர்ந்தார். அதாவது நிர்மலா வாங்கிய கடனை அவரால் கட்ட முடியவில்லை. சூழல் இப்படி இருக்க அவருக்கு எப்படி எம்.எல்.சி பதவி வழங்கலாம் என்பதுதான் அந்த வழக்கின் சாராம்சம்.
இந்திய அரசியல் சாசனப்படி திவால் ஆன ஒருவருக்கு எம்.எல்.சி பதவி வழங்கப்படக்கூடாது. அவரால் அந்தப் பதவியை வகிக்க முடியாது. எனவே வெண்ணிற ஆடை நிர்மலா தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றுக்கொண்டார். இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த எம்ஜிஆர் எம்.எல்.சி பதவியையே காலி செய்துவிட்டார். அந்த திவால் வழக்கு மட்டும் இல்லை என்றால் நிர்மலாவின் அரசியல் வாழ்க்கை வேறு மாதிரி இருந்திருக்கும். ஆனால் அது அவரது வாழ்க்கையையே திருப்பி போட்டுவிட்டது” என்றார்.





