இயக்குனர் லிங்குசாமி தமிழ் சினிமாவின் கமர்சியல் இயக்குனர்களுள் மிக முக்கியமானவர். “ரன்”, “சண்டக்கோழி”, “வேட்டை” போன்ற பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்தவர் இவர்.
லிங்குசாமி இயக்கிய முதல் திரைப்படம் “ஆனந்தம்”. இதில் மம்மூட்டி, முரளி, அப்பாஸ், தேவயானி, சினேகா, ரம்பா உட்பட பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்” என்ற பாடல் மிகவும் பிரபலமான பாடலாகும்.
இந்த நிலையில் இத்திரைப்படத்தில் வசன கர்த்தாவாக பணியாற்றிய பிருந்தா சாரதி சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது இத்திரைப்படத்தை குறித்த ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துகொண்டார்.
அதாவது இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 60 நாட்கள் முடிவடைந்த பிறகு தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியிடம் இன்னும் 10 நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்று கூறினார்களாம். ஆனால் சௌத்ரியோ, “இப்படி எத்தனை நாட்கள் இழுத்தடித்துக்கொண்டே போவீர்கள். எனக்கு இந்த படமே வேண்டாம். வேறு ஒரு தயாரிப்பாளரை வைத்து எடுத்துக்கொள்ளுங்கள்” என கூறிவிட்டாராம்.
அதன் பின் லிங்குசாமி சௌத்ரியை நேரில் சந்தித்து அழுதிருக்கிறார். சௌத்ரி, “என்ன? ஏன் அழுகிறாய்?” என்று கேட்டதற்கு, லிங்குசாமி, “நீங்கள்தான் இந்த படத்திற்கு தயாரிப்பாளர். நீங்கள் எனக்கு சில நாட்கள் மட்டும் கொடுங்கள். நான் விரைவில் படத்தை முடித்து விடுகிறேன். அப்படி இல்லை என்றால் நானே இந்த படம் எனக்கு வேண்டாம் என்று எழுதிகொடுத்துவிடுகிறேன். நீங்கள் வேறு இயக்குனரை வைத்து இந்த படத்தை முடித்துக்கொள்ளுங்கள்” என கூறினாராம்.
இதனை பார்த்தவுடன் சௌத்ரிக்கு மனம் நெகிந்துவிட்டதாம். அதன் பின் “சரி, 15 நாள் கொடுக்குறேன், முடிச்சிக்கொடுத்திடு” என்று கூறியுள்ளார். அதன் பிறகுதான் லிங்குசாமி மொத்த படத்தையும் முடித்திருக்கிறார்.





