கோலிவுட்டில் கண்ணும் கண்ணும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மாரிமுத்து. அதனைத் தொடர்ந்து புலிவால் படத்தை இயக்கினார். ஆனால் இரண்டு படங்களுமே படுதோல்வியை சந்தித்தன. இருந்தாலும் கண்ணும் கண்ணும் விமர்சன ரீதியாக பலத்த வரவேற்பைப் பெற்றது. இயக்கத்தில் சறுக்கினாலும் சினிமாவிலிருந்து ஒதுங்காத மாரிமுத்து யுத்தம் செய் படத்தில் நடிகராக அறிமுகமானார்.
அந்தப் படத்தில் அவரது எதார்த்த நடிப்பை பார்த்த பலரும் பட வாய்ப்புகளை கொடுத்தனர். அதன்படி அவர் நடித்த பல படங்களில் அவரது கேரக்டர் கொண்டாடப்பட்டது. கடைசியாக அவர் நடிப்பில் ஜெயிலர் படம் வெளியானது. அதுமட்டுமின்றி இந்தியன் 2, கங்குவா உள்ளிட்ட 15 படங்கள் அவரது நடிப்பில் வெளியாகவிருக்கின்றன.
சினிமாவில் அடைந்த பிரபலம் போல சீரியல் மூலமும் மாரிமுத்து பட்டித்தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார். திருச்செல்வம் இயக்கிவரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதிகுணசேகரன் கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார். அதில் அவரது எதார்த்தமான நடிப்பும், டைமிங் கவுண்ட்டர்களும் பலரையும் அவருக்கு ரசிகர்களாக மாற்றியது. இதனால் புகழின் உச்சியில் இருந்தார் அவர்.
இந்த சூழலில் கடந்த எட்டாம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார் மாரிமுத்து. அவரது உயிரிழப்பு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவர் உயிரிழந்ததை அடுத்து அடுத்த ஆதிகுணசேகரனாக யார் நடிக்கப்போகிறார் என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்தது. அதன்படி வேலராமமூர்த்தியிடம் சீரியல் குழு முதலில் பேச்சுவார்த்தை நடத்தியது.
ஆனால் அந்தப் பேச்சுவார்த்தை தொடர்ந்து இழத்தடித்துக்கொண்டே சென்றது. காரணம் வேல ராமமூர்த்தி கைவசம் நிறைய படங்கள் இருக்கின்றன. எனவே தன்னால் நடிக்க முடியுமா என்று யோசனை இருப்பதாக கூறினார். அதனையடுத்து பசுபதியிடம் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்பட்டது. சூழல் இப்படி இருக்க எதிர்நீச்சல் சீரியலின் புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகியிருக்கிறது.
அதன்படி ஆதிகுணசேகரன் கடிதம் ஒன்றை தனது ஆடிட்டரிடம் கொடுத்துவிட்டு வீட்டில் யாருக்கும் சொல்லாமல் எங்கோ போய்விட்டது போன்ற காட்சிகள் ப்ரோமோவில் இருக்கின்றன.மேலும் ஆதிகுணசேகரனை நினைத்து குடும்பத்தினர் ஃபீல் செய்யும்படியும் காட்சிகள் இருக்கின்றன. இதனால் இனி சீரியலில் ஆதிகுணசேகரன் கதாபாத்திரம் இருக்காதோ என்ற கேள்வி எழுந்திருக்கிறது. அதேசமயம் வேறு யாரேனும் நடிக்க ஒத்துக்கொள்ளும்வரை ஆதிகுணசேகரன் இல்லாமல் சீரியலை கொண்டு போகும் ஒரு உத்தியாகவும் இது இருக்கலாம் என்று கருதப்படுகிறது.





