பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி பாத்திமா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பாத்திமா தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக இருந்தவர். இவர்களுக்கு மீரா என்ற மகளும், லாரா என்ற மகளும் இருந்தனர். இவர்களில் மீரா மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தையுடன் ரொம்பவே நெருக்கமாக பேசும் வழக்கமுடையவர் மீரா.
அதேபோல் தனது தோழிகளிடமும் ஜாலியாக கலகலப்பாக பேசக்கூடியவர் அவர். ஆனால் அவர் கடந்த ஒரு வருடமாகவே தீவிரமான மன உளைச்சலில் இருந்ததாகவும் அதற்காக காவேரி மற்றும் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. சூழல் இப்படி இருக்க ஏதோ காரணத்தால் கடந்த 19ஆம் தேதி வீட்டில் இருக்கும் அறையில் தூக்கு மாட்டிக்கொண்டார் மீரா.
காலை 6 மணிக்கு விஜய் ஆண்டனி மீராவின் அறை கதவை தட்டியிருக்கிறார். ஆனால் நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் கதவை உடைத்துக்கொண்டு சென்று பார்த்தார். அப்போது மீரா காத்தாடியில் தூக்கு மாட்டி தொங்கிய நிலையில் இருந்தார். அதிர்ச்சியடைந்த விஜய் ஆண்டனி உடனடியாக மீராவை தூக்கிக்கொண்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்றார். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டார்கள்.
இதனையடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் உடற்கூராய்வு முடிந்து விஜய் ஆண்டனி இல்லத்துக்கு உடல் கொண்டு வரப்பட்டது.அங்கு திரையுலக பிரபலங்கள், விஜய் ஆண்டனி வீட்டில் பணியாற்றியவர்கள் உள்ளிட்டோர் வந்து மீராவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். உடைந்து போய் உட்கார்ந்திருந்த விஜய் ஆண்டனியையும் பாத்திமாவையும் தேற்றுவதற்கு அவர்களிடம் வார்த்தைகள் எதுவும் இல்லை.
கல்லறைத் தோட்டத்தில் இடம் கிடைக்க தாமதமானதால் நேற்று காலை மீராவின் உடலுக்கு தேவாலயத்தில் இறுதிச்சடங்கு நடந்தது. அதனையடுத்து கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் சவப்பெட்டி ஒன்றில் வைத்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. எதாலும் ஈடுகட்ட செய்ய முடியாத இழப்பை சந்தித்தபடி விஜய் ஆண்டனி உடைந்து அழுதார்.
இந்நிலையில் மீராவின் மரணம் குறித்து பாத்திமா கூறுகையில், “எந்த பிரச்னையாக இருந்திருந்தாலும் என்னிடமாவது ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம். இந்த முடிவை எடுப்பதற்கு முன்பு ஒரு நிமிடம் யோசித்திருக்கலாம். இந்த ஜென்மத்தில்தான் சேர்ந்து வாழ முடியவில்லை. கண்டிப்பாக அடுத்த ஜென்மத்தில் அவர் எனது மகளாக பிறப்பார்” என்றார் சோகமாக.





