அஜித் தனது இளம் வயதில் இருந்தே கார் ரேஸ், பைக் ரேஸ் போன்றவற்றில் ஈடுபட்டு வருகிறார் என்பது ரசிகர்கள் பலரும் அறிந்த ஒன்றே. இது போன்ற ரேஸ்களில் ஈடுபட்டு அவருக்கு பல முறை விபத்து ஏற்பட்டது உண்டு. அந்த விபத்தின் பலனாக அவரது முதுகு பகுதியில் பல அறுவை சிகிச்சைகளும் நடந்துள்ளது. இந்த அறுவை சிகிச்சையால் பல அவதிகளுக்கு உள்ளானார் அஜித். ஆனாலும் பைக் ரேஸ், கார் ரேஸ் போன்றவற்றின் மீது இருந்த ஈடுபாடு மட்டும் அவருக்கு குறையவில்லை.

அஜித்குமார் அவ்வப்போது பல இடங்களுக்கு பைக் பயணம் போவது வழக்கமான ஒன்று. சமீப காலமாக பல இடங்களில் பைக் ரைடு சென்று வருகிறார். இதனை தொடர்ந்து தனது கனவு பயணமான பரஸ்பர மரியாதை பயணத்தை அஜித் தொடங்கியுள்ளார். அதாவது உலக நாடுகள் முழுவதிலும் பைக் பயணம் செல்வதுதான் பரஸ்பர மரியாதை பயணத்தின் நோக்கம்.
இதன் முதல் பகுதியாக இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பைக் பயணம் மேற்கொண்ட அஜித்குமார் நேபாள், பூடான் ஆகிய நாடுகளுக்கும் சென்று வந்தார். அஜித்குமார் தற்போது “விடாமுயற்சி” திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த பிறகு நவம்பர் மாதம் தனது பரஸ்பர மரியாதை பயணத்தின் இரண்டாம் கட்டத்தை அஜித் தொடங்கவுள்ளார். கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் பைக்கில் சுற்றவுள்ளார்.

இதனிடையே அஜித்குமார் மோட்டார் சைக்கிள் சுற்றுலாவுக்கு என்றே “ஏகே மோட்டோ ரைடு” என்ற ஒரு நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார். இந்த நிறுவனம் பைக் சுற்றுலா செல்பவர்களுக்கு என்றே தொடங்கப்பட்ட நிறுவனமாகும். இந்த நிறுவனத்திற்காக 12 கோடிகளுக்கு மேல் செலவு செய்யப்பட்டு மோட்டார் சைக்கிள்கள் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டுள்ள மூத்த பத்திரிக்கையாளர் அந்தணன், “ஏகே மோட்டோ ரைடு” நிறுவனத்தை குறித்து ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார். அதாவது ஏகே மோட்டோ ரைடு நிறுவனத்தில் ஒரு பைக் ரைடு செல்வதற்கு 8 லட்ச ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறதாம். கட்டணம் செலுத்திவிட்டால் அவர்களின் வழிகாட்டுதலின்படி அவர்கள் கொடுக்கும் மோட்டார் சைக்கிளை வைத்து பயணத்தை மேற்கொள்ளலாமாம்.





