உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் விக்ரம். மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களை எடுத்த லோகேஷ் கனகராஜ் இதனை இயக்கினார். கமலுடன் பகத் பாசில், விஜய் சேதுபதி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மகனை பழிவாங்கும் தந்தையின் கதைதான் விக்ரமின் மையப்புள்ளி என்றாலும் அதனை காட்சிப்படுத்தியிருந்த விதத்தில் கலக்கி இருந்தார் லோகேஷ் கனகராஜ்.
திரைக்கதையை இறுக்கமாக அமைத்து ரசிகர்களின் பார்வையை திரையை விட்டு விலகாமல் பார்த்து கொண்டு வெற்றி கண்டார் லோகேஷ். அதிலும் கிளைமேக்ஸ் காட்சியில் சூர்யா தோன்றி, ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் மிரட்ட, கைதி படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் இதிலும் தொடர, இயக்குனரின் எல் சி யு கான்செப்ட் சரியாக வேலை செய்து ரசிகர்களை சென்றடைந்தது.
விக்ரம் படத்தின் பிரமாண்ட வெற்றியால் உற்சாகமடைந்த உலக நாயகன், தனது ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் படங்களை தயாரிக்கும் பணியில் ஆர்வம் காட்டி வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் மற்றும் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் திரைப்படம் என இரண்டும் கமலின் பேனரிலேயே தயாராகிறது.
இது மட்டுமல்லாமல் நடிப்பிலும் உலக நாயகன் அதீத கவனம் செலுத்தி வருகிறார். கமல் கதையில் ஹெச் வினோத் திரைக்கதை அமைக்கும் ராணுவ பின்னணி கொண்ட திரைப்படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்குகிறது. இதில் கமலுக்கு மகனாக சித்தார்த் அல்லது ஆர்யாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து மணிரத்னமுடன் இணைந்து கமல்ஹாசன் பணிபுரிய இருக்கிறார். இதில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க, கமல்ஹாசன் – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. கொரோனா காலத்திற்கு முன்பே தொடங்கப்பட்ட இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு, பல்வேறு பிரச்சனைகளால் தடைப்பட்டு நீதிமன்றம் வரை சென்று, பிறகு மீண்டும் தொடங்கியது. இதில் கமலுடன், காஜா அகர்வால், ரகுல் ப்ரீத்தி சிங், ப்ரியா பவானி ஷங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ், எஸ் ஜே சூர்யா, சித்தார்த், பாபி சிம்ஹா உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர்.
இந்தியன் படத்தின் முதல் பாகத்தில் சேனாதிபதி தாத்தாவாக வாழ்ந்த கமல், லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை கொலை செய்வார். அதிலும் இறுதிகாட்சியில் தனது மகன் குற்றம் இழைத்தான் என்பதை தெரிந்ததும் எந்தவித சமரசமுமின்றி மகனை கொன்று வெளிநாட்டுக்கு தப்புவார் சேனாதிபதி. இந்த நிலையில், இந்தியன் 2 கிளைமேக்சில் சேனாதிபதி தாத்தாவை அவரது பேரன் தண்டிப்பதை போன்று ஷங்கர் காட்சிபடுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கமலுக்கு பேரன் ரோலில் சித்தார்த் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு மே ஒன்றாம் தேதி இந்தியன் 2-வை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.





