தமிழ் சினிமாக்களில் குடும்ப கதைகள் வெற்றிப் பெற்ற காலம் என்று ஒன்று இருந்தது. அது விசு, வி. சேகர் படங்களை இயக்கிய காலம். அவர்கள் தந்த குடும்ப கதைகளை, இப்போதும் அந்த படங்களை பார்த்து ரசிக்க முடியும். குடும்ப உறவுகளின் சிக்கல்களை, குடும்பங்கள் சந்திக்கும் சமுதாய பிரச்னைகளை மிக யதார்த்தமான கதைகளாக்கி, திரைப்படமாக்கி ரசிகர்களின் பார்வைக்கு தந்தனர்.
சம்சாரம் அது மின்சாரம், வரவு நல்ல உறவு, பெண்மணி அவள் கண்மணி, டௌரி கல்யாணம், வீடு மனைவி மக்கள், மணல் கயிறு, குடும்பம் ஒரு கதம்பம் என விசு எடுத்த குடும்ப சித்திரங்கள், இன்றளவும் ரசிக்கப்படும் படங்களாக இருக்கின்றன. விசு படங்கள் என்றாலே, அதில் குடும்ப உறவுகளுக்கான பல விஷயங்கள், மிக எளிமையாக சொல்லப்பட்டு இருக்கும்.
அதே போல், வி சேகர் படங்கள், நகைச்சுவை கலந்த குடும்ப படங்களாக இயக்கப்பட்டன. விரலுக்கேத்த வீக்கம், பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும், பொங்கலோ பொங்கல், ஒண்ணா இருக்க கத்துக்கணும், காலம் மாறிப் போச்சு, வரவு எட்டணா செலவு பத்தணா, நான் பெத்த மகனே, நீங்களும் ஹீரோதான் என அவரது படங்கள் குடும்பங்களை பற்றியும், சமுதாயங்களை பற்றியும் பேசின.
இதுமட்டுமின்றி விக்ரமன் இயக்கிய படங்களிலும், பெரும்பாலும் குடும்பம் சார்ந்த விஷயங்கள் அதிகமாக இருந்தன. சூரியவம்சம், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வானத்தை போல, பூவே உனக்காக போன்ற படங்களும், குடும்பங்களை மையப்படுத்திய படங்களாக இருந்தன. இதுபோன்ற படங்களும் வெற்றி பெறுகின்றன.
ஆனால், இப்போதைய சூழலில் இதுபோன்ற குடும்ப படங்கள் மிக குறைவாகவே வெற்றி பெறுகின்றன. ஏனெனில் ரசிகர்கள் விரும்புகிற வகையில், அந்த படங்கள் படமாக்கப்படுவதும் இல்லை. ரசிகர்கள் விரும்பும் படியான கதை அம்சங்களும் அதில் இருப்பதில்லை.
இன்று விஜய் 68 படத்தின் துவக்க விழா பூஜை, சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் நடத்திருக்கிறது. விஜய், பிரசாந்த், பிரபுதேவா, படத்தின் இயக்குநர் வெங்கட்பிரபு, சிநேகா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், இதில் நடிகை லைலாவும் கலந்துக்கொண்ட நிலையில், அப்பா, மகனாக விஜய் நடிக்கும் இது குடும்ப படமாக வெளிவரலாம் என தகவல் வைரலாகி வருகிறது. ஏற்கனவே வாரிசு தந்த தோல்வியின் காயம் ஆறாத நிலையில், மீண்டும் குடும்ப சித்திரமா என விஜய் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.





