- Advertisement -
Homeபொழுதுபோக்குஎங்களுக்கு அதிகாலை காட்சி போட்டே ஆகணும்... அடம் பிடிக்கும் லியோ தயாரிப்பாளர்... திட்டமிட்டபடி படம் ரிலீஸ்...

எங்களுக்கு அதிகாலை காட்சி போட்டே ஆகணும்… அடம் பிடிக்கும் லியோ தயாரிப்பாளர்… திட்டமிட்டபடி படம் ரிலீஸ் ஆகுமா…

- Advertisement -

வழக்கம்போல விஜய்யின் லியோ படத்திற்கு ரிலீஸ் சமயத்தில் மீண்டும் பிரச்சனை வந்துவிட்டது என்றே கூறலாம். வரும் வியாழன் கிழமை திரைப்படம் வெளியாக இருக்கும் சூழலில், அதிகாலைக் காட்சி ரத்து, திரையரங்கு உரிமையாளர்களுக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையேயான பிரச்சனை உள்ளிட்ட காரணங்களால் இன்னும் பல முக்கிய திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கப்படாமல் இருக்கிறது.

அதேசமயம், கேரளா கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் லியோ திரைப்படத்திற்கான முன்பதிவு பட்டையை கிளப்பி வருகிறது. கேரளாவில் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதால், ரசிகர்கள் டிக்கெட் பெறுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அது மட்டும் இல்லாமல், படம் ரிலீஸ் ஆவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பாகவே அங்கு விஜய் கட்டவுட்டை அவர்கள் அமைத்துள்ளனர்.

- Advertisement -

திரையரங்குகளில் தினந்தோறும் ஆடிப் பாடும் அவர்கள், சாலையில் விஜய் படத்துடன் பேரணியாகவும் சென்று மாஸ் காட்டினர். இதேபோல் பெங்களூருவிலும் லியோ முன்பதிவு ஜோராக நடைபெற்று வருகிறது. அங்கு ஐ மேக்ஸ் திரையரங்கில் 2500 ரூபாய் டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் அதிகாலை காட்சிக்கு ரத்து செய்யப்பட்டிருப்பதால், காலை 9:00 மணிக்கே லியோ திரையிடப்படும் என்று கூறப்படுகிறது.

இருப்பினும் சென்னையின் முக்கிய திரையரங்குகளில் லியோ படத்திற்கான முன்பதிவு இன்னும் தொடங்கப்படவில்லை. படத்திற்கான முதல் வாரத்தில் 75 சதவீத வசூலை தயாரிப்பு நிறுவனம் கேட்பதாகவும், இதன் காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்சனையால் இன்னும் படம் ரிலீஸ் ஆவதற்கான ஒப்பந்தம் போடப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

தமிழ்நாட்டில், 19ஆம் தேதியிலிருந்து 25 ஆம் தேதி வரை லியோ திரைப்படத்தை 5 காட்சிகளாக திரையிடலாம் என்றும், நள்ளிரவு 1.30 மணிக்கு காட்சியை முடித்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிராக லியோ திரைப்பட தயாரிப்பாளர் லலித் குமார் உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். அதில் 1.30 மணிக்கு முடிக்க வேண்டும் என்றால் ஐந்து காட்சிகளை திரையிட முடியாது என்றும், இதனால் அதிகாலை 4:00 மணி காட்சி மற்றும் காலை 7:00 மணி காட்சிக்கு அனுமதி தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கூடுதல் காட்சிகளை ஒழுங்குபடுத்துவது குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஏற்கனவே ஒரு வழக்கு இருப்பதாக தமிழக அரசு தெரிவித்தது. இதனையும் அந்த பொது நல வழக்குடன் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் இதனை ஏற்ற உயர்நீதிமன்றம், விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தது. லியோ படம் ரிலீசுக்கு இன்னும் இரண்டே நாட்கள் உள்ள சூழ்நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடப்பதால் படம் சொன்ன தேதியில் ரிலீஸ் ஆகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்