தமிழ் சினிமாவில் கோடி கோடியாக பணத்தை கொட்டி படம் எடுத்தாலும், டாப் ஸ்டார்கள் நடித்திருந்தாலும், பெரிய பெரிய மியூசிக் டைரக்டர்கள் படத்துக்கு இசை அமைத்திருந்தாலும், எடுக்கப்பட்ட படங்கள் தியேட்டர்களுக்கு தான் வரவேண்டும். மக்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டர்களில் வந்து பார்த்தால்தான் குவியும் நூற்றுக்கணக்கான கோடிகளில் தயாரிப்பாளர்கள் லாபம் பார்க்க முடியும்.
தமிழ் சினிமாவை பொருத்த வரை, தியேட்டர்களில் திரையிடப்படும் படங்களுக்கு 50க்கு 50 என்பதுதான் விநியோகஸ்தர்களுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் உள்ள டிக்கெட் வசூல் பங்கீட்டு முறை. அதுதான் நீண்ட காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது. அப்போதுதான் தியேட்டர் உரிமையாளர்களும் பலவிதமான செலவுகளை சமாளிக்க முடியும்.
அதாவது தியேட்டருக்கு வருபவர் ஒரு டிக்கெட் ரூ. 190 கொடுத்து வாங்கினால், அதில் அரசுக்கு வரியாக 52 ரூபாய் போய்விடும். மீதி 138 ரூபாயை தியேட்டர் உரிமையாளரும், விநியோகஸ்தரும் ஆளுக்கு பாதியாக ரூ. 69 பிரித்துக்கொள்வதுதான் நடைமுறையாக இருந்து வருகிறது.
ஆனால், லியோ படத்தை பொருத்த வரை, இந்த படம் திரையிட்ட தியேட்டர்களில் ரூ.190 டிக்கெட் கட்டணத்தில், அரசுக்கு வரி ரூ. 52 போக மீதி 138 ரூபாயில், 103 ரூபாயை, விநியோகஸ்தர் தரப்புக்கு கொடுத்துவிட்டு, ரூ. 35 மட்டுமே தியேட்டர் உரிமையாளர் பாக்கெட்டுக்கு வருகிறது. அதாவது, இந்தமுறை டிக்கெட் வசூல் 75 முதல் 80 சதவீதம் வரை, விநியோகஸ்தர்களுக்கு தரப்படுகிறது.
தீபாவளி வரை வேறு படங்கள் ரிலீஸ் இல்லை என்ற நிலையில், லியோ படத்தை திரையிட்டே ஆக வேண்டிய கட்டாயத்தில், இந்த அநியாய நிபந்தனைக்கு உட்பட்டு லியோ படத்தை தியேட்டர் உரிமையாளர்கள் திரையிட்டு உள்ளனர். சில தியேட்டர்கள் மட்டும் திரையிட மறுப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, இதுகுறித்து விவாதிக்க அனைத்து தயாரிப்பாளர்கள், தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர் சந்திப்பு கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு சென்னையில் நடப்பதாக இருந்தது.
ஆனால், மதியம் 2 மணியளவில் இந்த கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த டிக்கெட் வசூல் பங்கு பிரிப்பில் புதிய நிபந்தனையை கொண்டு வந்தது லியோ பட தயாரிப்பாளர், செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமார்தான். எனவே, இதுகுறித்து விவாதித்தால் விஜய் குறித்தும், லியோ படம் குறித்தும் பேசுவதால், விஜய்க்கு கெட்ட பெயர் ஏற்படும் என்பதால், கடைசி நேரத்தில், தீபாவளிக்கு பிறகு இதுபற்றி பேசிக்கொள்ளலாம் என முடிவு செய்து, இக்கூட்டம் திடீரென ரத்து செய்யபப்பட்டுள்ளது. ஆனால், இதே நிலை தொடர்ந்தால் தீபாவளி, பொங்கல் புதுப்படங்கள் ரிலீஸ் ஆகும் நேரங்களில் தியேட்டர்கள் திடீர் ஸ்டிரைக்கில் ஈடுபடும் முடிவில் இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறது.





