இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படங்களில் எல்சியு என்ற ஒரு விஷயம் வந்ததில் இருந்தே, அதை ஊதி ஊதி பெரிதுப்படுத்தி, பெரிய அளவில் அதை பூதாகரப்படுத்தி வருகின்றனர். இப்படி பழைய பட காட்சிகளை, அடுத்த படங்களில் கொண்டு வருவது ஒன்றும் பெரிய விஷயமில்லை. இது பல படங்களில் நடந்திருக்கிறது.
ஷாஜகான் என்ற படத்தில், ரோட்டில் விஜய், விவேக் பேசி வரும் ஒரு காட்சியில், ‘ ஜோதிகா இடுப்பை நீ மட்டும்தானே பார்த்தே’ என்பார், அதற்கு விவேக், சரி விடு, விடு, ஏதோ தெரியாம பார்த்துட்டேன்’ என்பார். அப்படி என்றாலும், அதுவும் கூட குஷி படத்தின் எல்சியு தான். ஆனால், அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஒரு காட்சியாக மட்டுமே ரசித்தனர்.
அதே போல், வீட்ல விசேஷம் படத்தில், கர்ப்பிணியான ஊர்வசியை கோவையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வர். அப்போது, முதலமைச்சர் எல்கேஜிக்கு நெஞ்சு வலியாம். ஹாஸ்பிடலில் சேர்த்திருப்பதாக அங்கிருப்பவர்கள், சத்யராஜிடம் சொல்வார்கள். நல்ல மனுஷன், பிரதமரே ஆவாருன்னு சொன்னாங்களே என்பார் சத்யராஜ்.
எல்கேஜி படத்தில் நடித்தவரும், வீட்ல விசேஷம் படத்தில் நடித்த ஆர்ஜே பாலாஜியும் ஒருவர்தான். தன்னுடைய முந்தைய படத்தின் தொடர்ச்சியாக, அந்த காட்சியை வைத்திருந்தார். அதுவும் எல்சியு தான். ஆனால், அதை சில நொடிகள் ரசித்துவிட்டு, அடுத்த காட்சியை ரசிகர்கள் ரசிக்க துவங்கி விடுகின்றனர்.
இப்போது ஒரு நேர்காணலில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஒரு தகவலை கூறி இருக்கிறார். விக்ரம் படத்தில் வரும் பகத் பாசில், சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தேன், என்று தனது காதலி காயத்ரியிடம் சொல்வார். அதே போல், லியோ படத்திலும் திரிஷாவிடம் ஒரு காட்சியில் பேசும் விஜய், சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு அனாதை ஆசிரமத்தில் வளர்ந்ததாக சொல்வார்.
இப்போது இந்த இரண்டு விஷயத்தையும் தொடர்புபடுத்திய ரசிகர்கள், அப்படி என்றால் அந்த சத்தியமங்கலம் அனாதை ஆசிரமத்தில் இருந்த பகத் பாசில் தான், லியோ பார்த்திபனாக மாறத் தேவையான ஆலோசனைகளை கொடுத்து உதவி இருப்பார். அந்த அனாதை ஆசிரமம் குறித்த தகவல்களை கொடுத்திருப்பார் என, ரசிகர்கள் பேசிக்கொள்வதாக ஒரு வியப்பூட்டும் தகவல் கிடைத்திருப்பதாக, லோகேஷ் கனகராஜ் கூறி இருக்கிறார். ஸ்ஸ்ஸ்… தாங்க முடியலை சாமி என்கிறனர் சினிமா விமர்சகர்கள்.





