தமிழ் சினிமாவில் அன்றும் இன்றும் என்றும் கொண்டாடப்படும் ஒரு நடிகர் இருக்கிறார் என்றால் அது புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மட்டும்தான். துவக்கத்தில் துணை நடிகராக அவர் நடித்து, பின் கதாநாயகனாக மாறி, மக்கள் மனங்களில் இடம் பிடித்து அதன்பின், தமிழ்நாட்டையே பிடித்து பொற்கால ஆட்சி செய்தவர் முதலமைச்சர் எம்.ஜிஆர்
சினிமாவில் எப்படியோ, அப்படித்தான் அரசியலிலும் அவர் உண்மையாக, நேர்மையாக செயல்பட்டார். மக்கள் நலனில் மட்டுமே அக்கறை கொண்ட ஒரு தலைவராக அவர் இருந்ததால், மூன்றுமுறை அவர் தமிழக முதல்வராக மக்களால் தேர்வு செய்யப்பட்டார். அமெரிக்காவில், மருத்துவமனையில் உடல் நலமின்றி படுத்துக்கொண்டிருந்த அவரை, தமிழகத்தில் மக்கள் வெற்றி பெறச் செய்தனர்.
கடந்த 1987ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி, அன்றைய தமிழக முதல்வராக இருந்த எம்ஜிஆர் இந்த மண்ணை விட்டு மறைந்தார். 36 ஆண்டுகள் ஆகியும் இன்னும் மக்கள் மனங்களில் வாழும் ஒரே தலைவராக, அதே புகழுடன் விளங்குபவர் எம்ஜிஆர் மட்டுமே. அதனால், அவரது ரசிகர்கள், மக்கள் அவரை கொண்டாடிக்கொண்டே இருக்கின்றனர்.
கடந்த 1973ம் ஆண்டில், எம்ஜிஆர் நடிப்பில், தயாரிப்பில், இயக்கத்தில் வெளிவந்த படம் உலகம் சுற்றும் வாலிபன். இந்த படத்தில் மஞ்சுளா, லதா, சந்திரகலா, நம்பியார், நாகேஷ் மனோகர், அசோகன் உள்ளிட்டோர் நடித்த இந்த படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 200 நாட்களுக்கு மேல் ஓடி, இந்த படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் இந்த படம் எடுக்கப்பட்டது. மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட வெளிநாடுகளில் எடுக்கப்பட்ட படமாக உலகம் சுற்றும் வாலிபன் அமைந்தது. எம்எஸ் விஸ்வநாதன் இசையில் இந்த படத்தின் அனைத்து பாடல்களும் செம டிரண்டிங் ஆக அந்த காலத்தில் இருந்தன. ரசிகர்களின் மனங்களை வென்றன.
தற்போது இந்த படம் வெளியாகி 50 ஆண்டுகள் ஆன நிலையில், இந்த படத்தின் 50ம் ஆண்டு வெற்றி பொன்விழா கொண்டாடப்பட உள்ளது. வரும் 5ம் தேதி சென்னை தி.நகரில் உள்ள தியாகராயர் கலையரங்கில் நடக்கும் பொன் விழாவில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி, நடிகை லதா, திரைப்பட தயாரிப்பார் ஐசரி கணேஷ் உள்ளிட்டோர் கலந்துக்கொள்கின்றனர். எம்ஜிஆர் ரசிகர்கள், இவ்விழாவில் திரளாக பங்கேற்க உள்ளனர்.





