இயக்குர் சுந்தர் சி. உள்ளத்தை அள்ளித்தா படம் மூலம், தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். மேட்டுக்குடி, முறைமாமன் உள்ளிட்ட படங்களை இயக்கி, ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். நடிகை குஷ்புவை திருமணம் செய்ததால், தமிழ் சினிமாத் துறையில் முக்கியமான மனிதராகவும் மாறினார்.
ரஜினி நடித்த அருணாசலம், கமல் நடித்த அன்பே சிவம் போன்ற படங்கள் சுந்தர் சிக்கு அதிக பாராட்டை பெற்றுத் தந்தது. ஒரு கட்டத்துக்கு பிறகு அரண்மனை என்ற பெயரில் பேய்க்கதைகளை படமாக்கி, சுந்தர் சி அசத்தினார். அவரே நடிகராகவும் மாறியதை தொடர்ந்து, பிற இயக்குநர்கள் படங்களிலும் நடித்தார்.
இப்படி இயக்குநர், நடிகர் என இரு நிலைகளிலும் இருக்கும் நிலையில், கணவர் சுந்தர் சி, மனைவி குஷ்பு இருவரும் தங்களது மகள் பெயரில் அவந்திகா பிக்சர்ஸ் என்ற பெயரில் படத்தயாரிப்பு நிறுவனமும் நடத்தி வருகின்றனர். சுந்தர் சி படங்கள், பிற நடிகர்களின் படங்கள் மற்றும் டிவி சீரியல்களையும் இந்த நிறுவனம் மூலம் தயாரித்து வெளியீடும் செய்கின்றனர்.
இப்போது சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 படம், வரும் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகிறது. சுந்தர் சி இயக்கும் படங்கள் எப்போதுமே நட்சத்திர கூட்டம் நிறைந்ததாக இருக்கும். பல முக்கிய நடிகர்கள் நடித்திருப்பர். தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ காலங்களில், குடும்பமாக தியேட்டர்களுக்கு வரும் மக்கள், இதுபோன்ற பெஸ்டிவல் படங்களை பார்க்கும்போது, அந்த பண்டிகை நாட்கள் சிறப்பாக இருக்கும்.
அதனால், இந்த படத்தை பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்யும் நோக்கத்தில் சுந்தர் சி இருந்தார். ஏனெனில் பொங்கலுக்கு ஒரு வாரம் வரை தொடர்விடுமுறை இருப்பதால் ரசிகர்களின் வருகையும் தியேட்டர்களில் அதிகரிக்கும். கலெக்சனும் எதிர்பார்த்தபடி இருக்கும் என்பதுதான் இதற்கு முக்கிய காரணங்கள்.
இதற்கிடையே அயலான், லால் சலாம், அரண்மனை 4 ஆகிய 3 படங்களையும் ரெட் ஜெயின்ட் மூவி நிறுவனம் வெளியீடு செய்கிறது. 3 படங்களில் 2 படங்களை வெளியிட்டால் அதிக லாபம் பெறலாம் என்பதால், ஒரு படத்தை தள்ளி வைக்க முடிவு செய்யப்பட்டது. அப்போது சுந்தர் சியிடம் கேட்ட போது, இது பெஸ்டிவல் படம், பொங்கலுக்கு வருவதுதான் சரியாக இருக்கும். நீங்கள் வேண்டாம் என்றால், நானே எனது நிறுவனம் மூலம் அரண்மனை 4 படத்தை ரிலீஸ் செய்கிறேன் என்று கூறி இருக்கிறார். ஆடிப்போன ரெட் ஜெயிண்ட் நிறுவனம், அதன்பிறகு தான் ரஜினி நடித்துள்ள லால் சலாம் படத்தை தள்ளி வைத்திருக்கிறது.





