நடிகர் எஸ்ஜே சூர்யா, இயக்குநராக தனது சினிமா பயணத்தை துவங்கி, இன்று முக்கிய நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்துக்கொண்டு இருக்கிறார். வாலி படம் அஜீத்குமாருக்கும், குஷி படம் விஜய்க்கும் அவர்களது சினிமா பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அந்த படங்களை இயக்கியவர் எஸ்ஜே சூர்யா தான்.
அன்பே ஆருயிரே, நியூ போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த எஸ்ஜே சூர்யா திடீரென காணாமல் போனார். பல ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு இறைவி படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த எஸ்ஜே சூர்யா இசை, ஸ்பைடர், மெர்சல் போன்ற படங்களின் மூலம் ரசிகர்களை தன்வசப்படுத்தினார்.
இதைத் தொடர்ந்து மாநாடு படத்தில், போலீஸ் அதிகாரி கேரக்டரில் எஸ்ஜே சூர்யா பேசிய தலைவரே, தலைவரே என்ற டயலாக் செம டிரண்டிங் ஆனது. இப்போது மார்க் ஆண்டனி படத்தில், நடிப்பு அரக்கனாக அசத்திய எஸ்ஜே சூர்யா நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் இன்று ரிலீஸ் ஆகி இருக்கிறது.
இந்த படத்தில், எஸ்ஜே சூர்யாவுடன் ராகவா லாரன்ஸ் நடித்திருக்கிறார். இந்த படம் குறித்து பாசிட்டிவ் ஆன விமர்சனங்களே வந்திருக்கின்றன. படத்தின் நீளம் மிக அதிகமாக இருந்தாலும், படத்தில் உள்ள பல விஷயங்கள் ரசிக்க வைக்கின்றன. குறிப்பாக ஒளிப்பதிவு, இசை சிறப்பாக இருப்பதாகவும், சிறந்த நடிகர்களாக லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா இந்த படத்திலும் அசத்தி உள்ளதாகவும் பலரும் பாராட்டி வருகின்றனர்.
சமீபத்தில், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் பிரமோசன் நிகழ்ச்சிக்காக சில இடங்களுக்கு ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா சென்றனர். அப்படி சென்ற இடம்தான் கேரளா. கேரளாவில் நடந்த பிரமோசனில் பங்கேற்ற இருவரும் மலையா சூப்பர் ஸ்டார் நடிக்கும் டர்போ என்ற படத்தின் படப்பிடிப்பு தளத்துக்கு திடீரென சென்றுள்ளனர்.
புலிமுருகன் படத்தை இயக்கிய வைஷாக் தான், டர்போ படத்தை இயக்கி வருகிறார். படப்பிடிப்பு தளத்துக்கு சென்று அங்கு இருந்த நடிகர் மம்முட்டியை சந்தித்த அவர்கள், ரசிகர்களாக மாறி அவருடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என, மம்முட்டியின் வாழ்த்துகளையும், ஆசிர்வாதங்களையும் இருவரும் பெற்று திரும்பி இருக்கின்றனர்.





