நடிகர் பார்த்திபன், இப்போது தனது படத்தின் டைட்டிலில் தனது பெயரை ராதாகிருஷ்ணன் பார்த்திபன் என, தந்தை பெயருடன் இணைத்துக் கொள்கிறார். நியூமராலஜி காரணமாக கூட இருக்கலாம். எதையும் வித்யாசமாக சிந்திப்பவர் என்ற பெயரும் பார்த்திபனுக்கு ரசிகர்கள் மத்தியில் உண்டு.
அந்த வகையில், இரவின் நிழல் என்ற படத்தை ஒரே ஷாட் முறையில் எடுத்து அசத்தியவர். ஒத்த செருப்பு படமும், அவர் ஒருவர் மட்டுமே நடித்த, விருதுகளை பெற்றது. கிறுக்கல்கள் என்ற தனது கவிதை நூலை, ஒரு திரைப்பட விழா போல அன்றைய முதல்வர் கருணாநிதியை வரவழைத்து நடத்தியவர்.
நடிகர் பாக்யராஜிடம் உதவி இயக்குநராக பணிசெய்த பார்த்திபன், புதிய பாதை படம் மூலம் இயக்குநராகி, பின் கதாநாயகனாகவும் அந்த படத்தில் நடித்திருந்தார். அந்த படம், அவரது சினிமா பயணத்துக்கு மட்டுமின்றி, வாழ்க்கை பயணத்துக்கும் புதிய பாதையாக அமைந்தது. அந்த படத்தின் நாயகி சீதாவை, தனது வாழ்க்கை நாயகி ஆக்கிக்கொண்டார் பார்த்திபன்.
பல ஆண்டுகளாக ராமன் – சீதையாக, பார்த்திபன் – சீதா வாழ்வதாக பலரும் கற்பனை செய்துக்கொண்டிருக்க, அவர்களது வாழ்விலும் பல பூகம்பங்கள் வெடித்ததை அவர்களது திடீர் பிரிவும், விவாகரத்தும் உறுதிபடுத்தியது. பார்த்திபனை விட்டு சீதா விலகி, இப்போதும் சினிமாவில், டிவி சீரியல்களில் தன் கலை பயணத்தை தொடர்கிறார். அதுபோல, பார்த்திபனின் திரை பயணமும் தொடர்கிறது.
இந்நிலையில், பார்த்திபனின் சமீபத்திய டுவிட்டர் (எக்ஸ்) பதிவு, வித்யாசமாக இருந்தாலும், இப்படியா எழுதுவது என்ற சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. ஜிகர்தண்டா 2 படத்தை பார்த்த பார்த்திபன் அந்த படம் குறித்து தனது கருத்தை, பாராட்டை பதிவு செய்திருக்கிறார். அதில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜை பேய் என்று அவர் குறிப்பிட்டதை பலரும் விமர்சித்து வருகின்றனர்.
அதில் பார்த்திபன், ஜிகர்தண்டா 3 பார்த்தேன். எப்டிஎப்எஸ் என என்றாவது ஒருநாள் நான் பதிவிடுவேன், அதற்கு காரணம் ஜிகர்தண்டா 2. நான் விமர்சகன் அல்ல, நிறை குறை சொல்ல. தெரியாமல் போய் போன இடத்தில் பிடித்து விட்டால் அதற்கு பெயர் பேய். இது கார்த்திக் சுப்புராஜ் என்ற பேயை பிடித்து போய் தானே, படத்திற்கே போகிறேன். நினைத்தபடியே மனதை பிடித்து உலுக்கி விட்டது என, அதில் எழுதியிருக்கிறார் நடிகர், இயக்குநர் பார்த்திபன். என்னதான் பாராட்டு என்றாலும், இப்படியா என பலரும் பார்த்திபனை திட்டி வருகின்றனர்.





