மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் இதுவரை ஐந்து படங்களை இயக்கியிருக்கிறார். அவற்றில் கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய மூன்று படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. குறிப்பாக விக்ரம் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இதனால் லோகேஷின் கிராஃப் உச்சத்துக்கு சென்றது. இந்த சூழலில் அவர் விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கினார்.
ஏற்கனவே விஜய்யும், லோகேஷும் இணைந்து மாஸ்டர் படத்தை கொடுத்திருந்ததாலும் விக்ரம் படத்தின் மெகா வெற்றியாலும் இந்தப் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் விமர்சன ரீதியாக படம் செம அடி வாங்கியது. அதிலும் லோகேஷ் கனகராஜை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர். இந்தப் படத்துக்குத்தான் இவ்வளவு பில்டப்பா என்ற ரீதியில்தான் பொதுவான ரசிகர்களின் விமர்சனம் இருந்தது.
படத்தின் ரிலீஸுக்கு பிறகு பேட்டியளித்த லோகேஷ் கனகராஜ் படத்தில் இந்த இந்த டீட்டெய்ல்கள் இருப்பதாக விளக்கினார். இதனைப் பார்த்த பலரும் இவர் ஏன் படம் ரிலீஸான பிறகு இந்த டீட்டெய்ல்களை சொல்கிறார். அதை ஒழுங்காக படத்திலேயே புரியும்படி ரசிகர்களுக்கு பிரசெண்ட் செய்திருக்க வேண்டியதுதானே எனவும் கிண்டல் செய்ய ஆரம்பித்தனர்.
இந்நிலையில் இயக்குநர் பி.எஸ்.மித்ரன் அளித்த ஒரு பேட்டியில், “ரசிகர்களிடம் ஒரு எதிர்பார்ப்பை கொடுத்துவிட்டு வேறு மாதிரி ஒரு படத்தை கொடுத்தால் நிச்சயம் அவர்கள் கடுப்பாகத்தான் செய்வார்கள். படம் பார்க்கும் ரசிகர்கள் ஒன்றும் மடையர்கள் இல்லை. படம் வெளியான பிறகு அந்தப் படத்தை பற்றி விளக்கம் கொடுப்பதோ இல்லை பாடம் நடத்துவதோ சரியான காரியம் இல்லை.
ஹீரோ படத்தை சூப்பர் ஹீரோ என்று புரோமோட் செய்துவிட்டோ. ஆனால் வந்து பார்த்த ரசிகர்களுக்கு நான் கருத்து சொன்னால் பிடிக்குமா. அதான் பிடிக்கவில்லை. ரசிகர்களுக்கு புரியும்படி ஒரு படத்தை இயக்குநர்தான் சரியாக கொடுக்க வேண்டும். இப்போதெல்லாம் கதைக்காக ரசிகர்கள் படம் பார்க்க வரவில்லை. ஜெயம் ரவி, சிம்பு, தனுஷ், கார்த்தி உள்ளிட்டவர்கள் அறிமுகமான காலத்தில் கதைக்கு முக்கியத்துவம் இருந்தது. இப்போது தங்களுக்கு பிடித்த ஹீரோவை தியேட்டரில் பார்க்க மட்டுமே ரசிகர்கள் வருகிறார்கள். எனவே அவர்களை சரியாக எண்ட்டெர்யின் செய்தாலே போதும்” என்றார்.
மித்ரனின் இந்தப் பேட்டியை பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக இதன் மூலம் அவர் லோகேஷ் கனகராஜைத்தான் மறைமுகமாக விமர்சித்திருக்கிறார். என்ன இது ஒரு படம் ஃப்ளாப் கொடுத்துட்டா ஒருத்தரின் நிலைமை தலைகீழாக மாறுதே என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.





